இலங்கைதமிழீழம்

மன்னார் கடலில் எரிபொருள் ஆய்வு – கத்தோலிக்க ஆயர் பேரவை கவலையும் விசனமும் தெரிவிப்பு

எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலில் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை விசனம் தெரிவித்துள்ளது.

மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் சேதம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதகமான இந்தச் செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செயற்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கான நேர்மறையான முன்னெடுப்புகளாக இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு அல்லது வெளிப்படைத்தன்மையுடன் இத்தகைய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தௌிவுப்படுத்தி முன்னெடுப்பது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் கருத்துக்களை உறுதிப்படுத்துவதற்காக முறையான கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

மக்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்தகைய செயற்பாடுகளால் மன்னார் தீவின் மீன்பிடிச் சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கும் நீர்வளத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முழு அமர்வின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button