
சுவிஸ் பெர்னில் உள்ள Inselspital மருத்துவமனையும் Fribourg பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், நாள்பட்ட வலி (Chronic Pain) மூளையில் தடயங்களை ஏற்படுத்தக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.
சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (SNSF) நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 30 ஆரோக்கியமான நபர்கள் மற்றும் “முதன்மை நாள்பட்ட வலி” (Primary Chronic Pain) கொண்ட 30 பேரின் மூளைகள் கட்டமைப்பு MRI பரிசோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டன.
“முதன்மை நாள்பட்ட வலி” என்பது காயம் அல்லது குறிப்பிட்ட நோய் போன்ற தெளிவாக அடையாளம் காணக்கூடிய காரணத்தால் முழுமையாக விளக்க முடியாத நீண்டகால வலியைக் குறிக்கிறது. Fibromyalgia இதற்கு ஒரு பொதுவான உதாரணமாகும்.
முந்தைய ஆய்வுகளும் நாள்பட்ட வலிக்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதைக் காட்டியிருந்தன. ஆனால், இந்த புதிய ஆய்வில், மூளையின் வெளிப்புற அடுக்கான cerebral cortex-இன் கட்டமைப்பில், நாள்பட்ட வலி கொண்டவர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் இடையே குறிப்பிட்ட வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, இடது மூளையின் முன்பகுதியில் உள்ள ஒரு பகுதி அதிகமாக மடிந்திருந்தது. இந்தப் பகுதி உணர்ச்சிகள் மற்றும் நினைவுகளைச் செயலாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், நாள்பட்ட வலியை உணர்ந்து மதிப்பிடுவதுடனும் தொடர்புடையதாக உள்ளது.
அதேவேளை, வலது மூளையில், குறிப்பாக அதன் முன்பகுதியில் உள்ள சில பகுதிகளில், மூளையின் பள்ளங்கள் (sulci) ஆரோக்கியமானவர்களை விட ஆழம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பகுதிகள் உணர்ச்சி தூண்டுதல்கள் மற்றும் வலியைச் செயலாக்குவதுடன் தொடர்புடையவை.
வலி – மன அழுத்தம் – உணர்ச்சிகள்: ஒரு தீய சுழற்சி?
Inselspital-ஐச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி Salome Häuselmann கூறுகையில், இந்தக் கண்டுபிடிப்புகள், திடீர் வலி நாள்பட்ட வலியாக மாறும்போது உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்முறைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றனஎன்ற கருதுகோளுடன் ஒத்துப்போகின்றன.
இதன் காரணமாக, வலி சமிக்ஞைகள், மன அழுத்தம், எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் வலி குறித்த மன மதிப்பீடுகள்ஒன்றோடொன்று இணைந்து, ஒன்றை ஒன்று மேலும் வலுப்படுத்தும் ஒரு தீய சுழற்சி உருவாகக்கூடும்.
ஆனால் ஒரு முக்கிய கேள்வி இன்னும் உள்ளது
இந்த ஆய்வு மூளையின் கட்டமைப்புக்கும் நாள்பட்ட வலிக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகிறது. ஆனால், நாள்பட்ட வலி காரணமாக மூளையின் கட்டமைப்பு மாறியதா, அல்லது ஏற்கனவே இருந்த குறிப்பிட்ட மூளை அமைப்பு காரணமாக அந்த நபர்கள் நாள்பட்ட வலிக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தார்களாஎன்பது இன்னும் தெளிவாகவில்லை.
இதற்கு பதிலளிக்க நீண்டகாலம் மேற்கொள்ளப்படும் சிக்கலான ஆய்வுகள் தேவைப்படும்.
இருப்பினும், ஒரு நம்பிக்கையான விடயமும் உள்ளது என Häuselmann கூறுகிறார்: “நமது மூளை தன்னைத் தானே மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது.”
எனவே, பயனுள்ள வலி மேலாண்மை மூலம், மூளையின் cortex பகுதியில் காணப்படும் மடிப்புகள் மற்றும் பள்ளங்கள் மீண்டும் வலி இல்லாதவர்களின் மூளை அமைப்பை ஒத்த நிலைக்கு மாறக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால், இத்தகைய மூளை மாற்றங்கள் உண்மையில் வலி அறிகுறிகள் குறைவதுடன் தொடர்புடையதா, அவ்வாறு இருந்தால் எந்த விதத்தில் தொடர்புடையது என்பது இன்னும் ஆராயப்பட வேண்டியுள்ளது.





