சுவிஸ்

உணவு விநியோக சேவைகளில் தரவுத் திருட்டு – சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை

 உணவு விநியோக சேவை வழங்குநர் ஒருவரின் பணம் செலுத்தும் பக்கத்தில் மோசடி செய்பவர்கள் முறைகேடு செய்துள்ளனர். ‘ஸ்கிம்மிங்’ (Skimming) எனப்படும் இந்த மோசடி குறித்து சுவிட்சர்லாந்தின் மத்திய இணையப் பாதுகாப்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

மோசடி செய்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்?

மத்திய இணையப் பாதுகாப்பு அலுவலகம் கண்டறிந்த தாக்குதலில், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்ட உணவு விநியோக சேவை நிறுவனத்தின் உண்மையான இணையதளத்தில் தீங்கிழைக்கும் குறியீட்டை (malicious code)புகுத்தியுள்ளனர்.

இதன் மூலம் வழக்கமாக வழங்கப்பட்ட Twint பணம் செலுத்தும் முறைக்குப் பதிலாக, “கடன் அட்டை மூலம் பணம் செலுத்துதல்” என்ற போலியான தெரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் அந்த தெரிவைத் தேர்வு செய்தவுடன், கடன் அட்டை விவரங்களை உள்ளிடுவதற்கான ஒரு பாப்-அப் சாளரம் திறக்கும். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இணையதளத்தின் மற்ற பகுதிகள் ஜெர்மன் மொழியில் இருந்தபோதிலும், இந்தப் போலியான பக்கத்தில் இருந்த தகவல்கள் ஆங்கிலத்தில் காணப்பட்டன.

வாடிக்கையாளர் உள்ளிடும் கடன் அட்டைத் தகவல்கள் நேரடியாக மோசடி செய்பவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. சந்தேகம் ஏற்படாமல் இருக்க, அதன் பின்னர் ஒரு பிழைச் செய்தி காட்டப்படுகிறது. அதில், கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி இன்னும் சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், அதற்குப் பதிலாக Twint பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இது ‘Phishing’ மோசடியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

இந்த முறைக்கு ‘Skimming’ என்று அழைக்கப்படுகிறது. இதில், வாடிக்கையாளரின் தகவல்கள் உண்மையான இணையதளத்திலிருந்தே திருடப்படுகின்றன.

இதற்கு மாறாக, Phishing மோசடியில், உண்மையான இணையதளம் போல தோற்றமளிக்கும் போலியான இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில் பயனர்களின் தகவல்கள் பெறப்படுகின்றன.

இணையதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம்?

மத்திய இணையப் பாதுகாப்பு அலுவலகத்தின் கூற்றுப்படி, தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாதவர்களுக்கு இதுபோன்ற இணையதள முறைகேடுகளை கண்டறிவது “மிகவும் கடினம், சாத்தியமற்றதாகக்கூட இருக்கலாம்.”

எனவே, இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் கடைகளை நடத்துபவர்கள் தங்களது வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பான ஆன்லைன் கொள்முதல் அனுபவத்தை உறுதி செய்வதற்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

  • அனைத்து பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் (security patches) முறையாக நிறுவ வேண்டும்.
  • இணையதளத்தின் அனைத்து மென்பொருள் மற்றும் கணினி அமைப்புகளும் எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.
  • பணம் செலுத்தும் Checkout செயல்முறை முறையாக செயல்படுகிறதா என்பதைத் தொடர்ந்து பரிசோதித்து, ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
  • சாத்தியமான இடங்களில் தானியங்கி சோதனைகள் அல்லது கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
  • நிர்வாகக் கணக்குகளுக்கு வலுவானதும் தனித்துவமானதுமான கடவுச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • இரண்டு-கட்ட அங்கீகாரத்தை (Two-Factor Authentication – 2FA) செயல்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
  • மூன்றாம் தரப்பு ஸ்கிரிப்ட்கள் தங்களது இணையதளத்தில் தரவுகளை ஏற்றுவதைத் தடுப்பதற்காக, கட்டுப்பாடான Content Security Policy (CSP) அமைப்பை உருவாக்க வேண்டும். இதன் மூலம் உலாவி எந்த ஆதாரங்களில் இருந்து JavaScript-ஐ இயக்கலாம், எந்த இடங்களுக்கு தரவுகளை அனுப்பலாம் என்பதைத் துல்லியமாக கட்டுப்படுத்த முடியும்.

வாடிக்கையாளராக ஸ்கிம்மிங் மோசடிக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைனில் கொள்முதல் செய்த பிறகு, தங்களது கடன் அட்டையில் விளக்கம் இல்லாத அல்லது சந்தேகத்திற்கிடமான கட்டணம் இருப்பதை வாடிக்கையாளர் கவனித்தால், அது நம்பகமானதும் பிரபலமானதுமான இணையதளமாக இருந்தாலும், அந்த இணையதளம் E-commerce skimming தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மோசடியான பரிவர்த்தனையை உடனடியாக வங்கி அல்லது கடன் அட்டை வழங்குநரிடம் தெரிவித்து, அந்தப் பணத்தை மீளப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்தை மத்திய இணையப் பாதுகாப்பு அலுவலகத்திடமும், சம்பந்தப்பட்ட கடை அல்லது சேவை வழங்குநரிடமும் தெரிவிக்க வேண்டும்.

நிதி இழப்பு ஏற்பட்டிருந்தால், சம்பவத்தை சம்பந்தப்பட்ட மண்டல காவல்துறையிடம் புகார் செய்யுமாறு மத்திய இணையப் பாதுகாப்பு அலுவலகம் பரிந்துரைக்கிறது.

அருகிலுள்ள காவல் நிலையத்தை Suisse ePolice தளத்தின் மூலம் எளிதாகக் கண்டறிய முடியும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button