
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த காஸா தொடர்பான 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களைக் கைவிடும் வரை காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “கற்பனையான” ஆயுதக் களைவு நடவடிக்கையை இஸ்ரேல் ஏற்காது என்றும், இஸ்ரேல் படைகள் வெளியேறுவதற்கு முன்பு ஹமாஸ் உண்மையாகவே ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலைப்பாடு, ட்ரம்பின் விரிவான காஸா அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் ட்ரம்ப் வெளியிட்ட தகவலின்படி, Board of Peace மூலம் உருவாக்கப்பட்ட 15 அம்ச ஆவணத்தின் அடிப்படையில் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் ஆயுதக் களைவுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முதலில் ஆயுதக் களைவா அல்லது இஸ்ரேல் படைகள் வெளியேறுவதா என்பது தொடர்பில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
ஹமாஸ் தரப்பு, இஸ்ரேல் காஸாவில் இருந்து வெளியேறும் வரை ஆயுதங்களைக் கைவிட முடியாது என்று தெரிவித்துள்ளது. அதேவேளை, இஸ்ரேல் ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களைக் கைவிடுவதும், காஸா ஆயுதமயமற்ற பகுதியாக மாற்றப்படுவதும் படைகள் வெளியேறுவதற்கு முன் நடைபெற வேண்டும் என்று கோருகிறது.





