சுவிஸ்

புலம்பெயர்ந்தோருக்கு பண உதவி வழங்கும் சூரிச் திட்டத்திற்கு நீதிமன்றம் தடை

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம், ஆவணமற்ற (சட்டபூர்வ குடியிருப்பு அனுமதியற்ற) புலம்பெயர்ந்தோருக்கு நிதி உதவி வழங்கும் தனது இரண்டாவது முயற்சியிலும் நீதிமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.

சூரிச் நகர சபை தாக்கல் செய்த மேன்முறையீட்டை, சூரிச் நிர்வாக நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் உயர்மட்ட சட்டங்களுக்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பின்படி, முன்மொழியப்பட்ட இடைக்கால மற்றும் அடிப்படை நிதி உதவித் திட்டம், கூட்டாட்சி (Federal) மற்றும் மாகாண (Cantonal) சட்டங்களுக்கு முரணாக உள்ளது.

மேலும், இவ்வகையான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான சட்டபூர்வ அதிகாரம் நகராட்சிகளுக்கு இல்லை என்றும், இந்தத் திட்டம் குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டிய கட்டாய சட்ட நடைமுறைகளைத் தவிர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது சூரிச் நகரத்திற்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு பின்னடைவாகும். இதற்கு முன்னர், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இதேபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்த நகரம் மேற்கொண்ட முதல் முயற்சியும் மாவட்ட நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. அப்போது, தீர்ப்புக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய காலக்கெடுவை நகர நிர்வாகம் தவறவிட்டிருந்தது.

எனினும், தற்போதைய தீர்ப்பை எதிர்த்து சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி உச்ச நீதிமன்றத்தில் (Federal Court)மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு இன்னும் உள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button