சுவிஸ்பிரான்ஸ்

பிரான்ஸுக்கு கைகொடுத்த சுவிஸ் – 34 தீயணைப்பு வீரர்கள் களத்துக்கு அனுப்பிவைப்பு

பிரான்சின் ஜிரோண்டே (Gironde) பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு உதவுவதற்காக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து 34 தீயணைப்பு வீரர்கள் நேற்று போர்டோவை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

ஜெனீவா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (GSIS) வெள்ளிக்கிழமை பிரெஞ்சு அதிகாரிகளுக்கு உதவி வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து, அந்த உதவியை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் மாகாணங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களைக் கொண்டு சிறப்பு செயல்பாட்டுக் குழு விரைவாக அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் ஜெனீவாவைச் சேர்ந்த 23 தீயணைப்பு வீரர்கள், வாட் (Vaud) மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர், நியூஷாடெல் (Neuchâtel) மாகாணத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஹாட்-சவோய் (Haute-Savoie) பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 34 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் துணை மருத்துவர் மற்றும் இயந்திரப் பராமரிப்பு நிபுணரும் அடங்குகின்றனர். சனிக்கிழமை நண்பகலில் ஆறு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஐந்து இலகுரக, உதவி வாகனங்கள் உட்பட மொத்தம் 11 வாகனங்களுடன் குழுவினர் புறப்பட்டு, அதே நாள் மாலை போர்டோவை அடைந்துள்ளனர்.

GSIS-இன் கட்டளையின் கீழ் செயல்படும் இந்தப் படைப்பிரிவு, ஜிரோண்டே பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளுக்கு ஆதரவளிப்பதுடன், நகர்ப்புற தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கும் நிவாரணமாக செயல்படவுள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பின் கீழ், நான்கு இலகுரக ஹெலிகொப்டர்களை அனுப்புமாறு சுவிட்சர்லாந்திடம் பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார்

எனினும், சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் அதிகரித்துள்ள காட்டுத்தீ அபாயத்தை கருத்தில் கொண்டு, வான்வழி வளங்களின் இருப்பை மத்திய பாதுகாப்பு மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறை தற்போது மதிப்பீடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீடு நிறைவடைந்த பின்னரே ஹெலிகொப்டர்கள் அனுப்புவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், எந்த வகை இராணுவ ஹெலிகொப்டர்கள் பிரான்சுக்கு அனுப்பப்படலாம் என்பது தொடர்பில் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிஸிலிருந்து இந்த உதவிக்கான அதிகாரப்பூர்வ கோரிக்கை வெள்ளிக்கிழமை மாலை கிடைத்ததாகவும் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button