இலங்கைதமிழீழம்தமிழ்

வட ஈழத்தின் தொன்மை வரலாற்றை வெளிக்கொணரும் ஆனைக்கோட்டை அகழாய்வு!

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வு வட இலங்கையின் தொன்மை வரலாற்றை வெளிக்கொணரும் என ஆனைக்கோட்டை அகழாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 2026தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தொல்லியல் சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சயிதரனியின்  தலைமையிலும், களனிப் பல்கலைக்கழக தொல்லியல் பட்டப்பின்படிப்புக்கள் நிறுவன சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ்வின் இணைத் தலைமையிலும் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் அகழாய்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் கேரளாப்பல்கலைக்கழக தொல்லியல் துறையினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர், வாழ்நாள் பேராசிரியர் செ. கிருஷ்ணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொல்லியல் மாணவர்கள், கொழும்பு பல்கலைக்கழக தொல்லியல் பட்டப்பின்படிப்புகள் நிறுவன மாணவர்கள்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல்துறை பழைய மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்று வருகின்றனர்.
இது தொடர்பாக அகழ்வாய்வுக் குழு கருத்துத் தெரிவிக்கையில்;
இத்திட்டம் எதிர்கால தொல்லியலாளர்களுக்கான நடைமுறைப் பயிற்சியை வழங்கும் முக்கிய கல்வி முயற்சியாக அமைவதுடன்,
வட இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்தைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
1980களில் பேராசிரியர் க. இந்திரபாலா மற்றும் கலாநிதி பொ.இரகுபதி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், 2024 ஆம் ஆண்டில் வாழ்நாள் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகளும், இப்பகுதியின் தொன்மை, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னைய அகழாய்வுகளில் கருப்பு–சிவப்பு மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், இரும்பு உருக்குச் சான்றுகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், முத்துக்கள், விலங்கு எலும்புகள், மீன் எச்சங்கள், நண்டு மற்றும் சங்கு ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்-பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட “கோவேத” முத்திரை கண்டுபிடிக்கப்பட்டது வட இலங்கையின் ஆரம்ப அரசியல் அமைப்பு, எழுத்தறிவு மற்றும் சமூக வளர்ச்சியை விளக்கும் அரிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.
புவியியல் நோக்கில், ஆனைக்கோட்டை யாழ்ப்பாணக் கடலேரி, வளுக்கையாறு கழிமுகம் மற்றும் இயற்கையான கடல்சார் வளங்களுடன் தொடர்புடைய இடத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையமைப்பு, பண்டைய காலத்தில் சிறிய கப்பல்களின் தரிப்பிடமாகவும், கடல்சார் வணிகம், உள்நாட்டு போக்குவரத்து மற்றும் தென்னாசிய வர்த்தகத் தொடர்புகளின் மையமாகவும் இப்பகுதி விளங்கியிருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
இம்முறை நடைபெறும் அகழாய்வில், கண்டறியப்பட்ட தொல்லியல் சான்றுகளுக்கு மேலதிகமாக புதிய தகவல்களைப் பெறுவதற்காக நவீன அறிவியல் ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கார்பன்–14 (AMS) காலக்கணிப்பு, சிப்பி மற்றும் கரி மாதிரிகளின் ஆய்வு, விலங்கியல் (Zooarchaeology) ஆய்வு, மட்பாண்டப் பகுப்பாய்வு மற்றும் பிற ஆய்வகச் சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
இவ்வாய்வுகள் வட இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்கான துல்லியமான காலவரிசையையும், மனித வாழ்வியல் முறைகளையும் அறிவியல் அடிப்படையில் மீளமைக்க உதவும். ஆனைக்கோட்டை ஒரு சாதாரண தொல்லியல் தளம் அல்ல; இது வட இலங்கையின் வரலாறு, பண்பாடு, சமூக அமைப்பு, கடல்சார் தொடர்புகள் மற்றும் தென்னாசிய நாகரிகங்களுடனான உறவுகளைப் புரிந்துகொள்ளும் முக்கியமான மையமாகவும் காணப்பட்டது என்பதற்கும் இவ்ஆய்வு சான்றாக அமையும்.
இத்தளத்தில் காணப்படும் எலும்பு எச்சங்கள், விலங்கு மற்றும் மீன் எச்சங்கள், மட்பாண்டங்கள், மணிவகைகள், உலோகத் தொழில்நுட்ப சான்றுகள் எதிர்கால அறிவியல் ஆய்வுகளுக்கு அரிய தரவுகளை வழங்குகின்றன.
தற்போது நிலப் பயன்பாட்டு மாற்றங்கள், தாவர வளர்ச்சி மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமாக இத்தொல்லியல் தளத்தின் பல பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
எனவே, இத்தளத்தை முறையாக ஆவணப்படுத்தி, பாதுகாத்து, தொடர்ந்து அறிவியல் ரீதியான ஆய்வுகளை முன்னெடுப்பது மிகவும் அவசியமாகியுள்ளது.
ஆனைக்கோட்டை அகழாய்வானது வட இலங்கையின் தொன்மை வரலாற்றையும் பண்பாட்டு மரபையும் அறிவியல் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு முயற்சியாகும்.
இத்திட்டம் மாணவர் பயிற்சி, அறிவியல் ஆராய்ச்சி, பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, எதிர்கால தலைமுறைகளுக்காக வட இலங்கையின் தொன்மை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நீண்டகால முதலீடாகவும் அமையும்.
பொதுமக்கள், கல்வியாளர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ,தனியார் நிறுவனங்கள் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பில் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினரும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும்.இந்த ஆய்வு வட இலங்கையின் தொன்மை வரலாற்றை உலக அறிவியல் சமூகத்தின் முன் புதிய ஆதாரங்களுடன் எடுத்துச் செல்லும் முக்கியமான முன்னெடுப்பாக அமையும். எனவும் ஆய்வுக் குழு மேலும் தெரிவித்துள்ளது
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button