
இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் (Volker Türk) சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2024 செப்டம்பரில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றபோது, கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தது.
எனினும், செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட உயர் ஆணையரின் அறிக்கையில், சில முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், 2009ஆம் ஆண்டு முடிவடைந்த விடுதலைப் புலிகளுடனான போரின்போது அனைத்து தரப்பினராலும் இடம்பெற்ற சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள், பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பில் இதுவரை பொறுப்புக்கூறல் அல்லது முறையான அங்கீகாரம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் கவலை
செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், Human Rights Watch இதேபோன்ற கவலைகளை முன்வைத்துள்ளது.
சில முக்கியமான வழக்குகளில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றம் காணப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், உதவிப் பணியாளர்கள் படுகொலை மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்தொடர்பான வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்குத் தேவையான சட்ட மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், சுயாதீனமான அரச சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதாக வழங்கிய உறுதியையும் அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை.
மேலும், கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தையும் (Sri Lanka Accountability Project)திஸாநாயக்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகிறது
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் துன்புறுத்தவும் கைது செய்யவும் இலங்கை அரசாங்கம் இன்னும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA)பயன்படுத்தி வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இவர்கள் அரச புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரை, அதன் பயன்பாட்டுக்கு தற்காலிகத் தடைவிதிக்க வேண்டும் என்றும், நீண்டகாலமாக இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவசர சீர்திருத்தங்கள் தேவை
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்ட மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அடக்குமுறைச் சட்டங்களை நீக்குதல், பாதுகாப்புத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவை அவசியம் என அறிக்கை வலியுறுத்துகிறது.
இவை மேற்கொள்ளப்படாவிட்டால், குற்றங்களுக்கு தண்டனையின்மை நிலை மேலும் வலுப்பெறுவதுடன், பாதிக்கப்பட்டவர்களிடையே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மையும் மேலும் ஆழமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
“இரண்டு தசாப்தங்களாக குடும்பங்கள் காத்திருக்கின்றன”
சர்வதேச குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலில் இலங்கை அரசாங்கத்தின் முன்னேற்றத்தை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும், ஏனைய நாடுகளும், உண்மை மற்றும் நீதியை உறுதி செய்வதற்கான தனது உறுதிமொழிகளை திஸாநாயக்க அரசாங்கம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
“இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் காத்திருக்கின்றன.”





