
இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கம் (SLWJA), ஊடகவியலாளர் லஹிரு டொலோஸ்வலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இராணுவம் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற மற்றும் சட்டவிரோத அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உடனடியாக தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் அறிக்கையின்படி, The Morning செய்தித்தாளின் இணையப் பதிப்பாசிரியரான லஹிரு டொலோஸ்வலா, கடந்த ஜூலை 15 அன்று தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இராணுவத் தளபதியின் பாதுகாப்பு அணிக்குச் சொந்தமான லேண்ட் க்ரூசர் வாகனம் அவரது வாகனத்தில் மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அவர் தனது கைப்பேசியில் பதிவு செய்ய முயன்றபோது, கமாண்டோ பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மிரட்டியதுடன், படம்பிடிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டதாகவும், இதனால் அவரது குடும்பத்தினர் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கச் சென்றபோது, சுமார் 30 இராணுவத்தினர் அங்கு வந்து முறைப்பாடு செய்ய விடாமல் தடுத்ததாக SLWJA குற்றஞ்சாட்டியுள்ளது.
இறுதியில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டாலும், அது அழுத்தத்தின் கீழ் மாற்றியமைக்கப்பட்டதாகவும், மேலும் அவரது கைப்பேசியில் இருந்த காணொளி ஆதாரங்கள் கட்டாயமாக அழிக்கப்பட்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
“நான்கு மணி நேரம் நீடித்த இந்தச் சம்பவத்தால் டொலோஸ்வலா மற்றும் அவரது குடும்பத்தினர் அடைந்த மன உளைச்சல் இன்னும் நீங்கவில்லை. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து, நாடு அராஜக நிலைக்குச் செல்வதை வெளிப்படுத்துகிறது” என சங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி, சம்பவத்தில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மீது உடனடியாக உத்தியோகபூர்வ விசாரணை நடத்தி, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊடகச் சுதந்திரமும் குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து SLWJA-வுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.







