விளையாட்டு

எல்.பி.எல். ஆரம்பப் போட்டியில் அபார வெற்றி பெற்ற கோல் கெலன்ட்ஸ் அணி

6ஆவது லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியாக நேற்று (17) இலங்கையில் நடைபெற்ற முதலாவது போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியைத் தோற்கடித்து 36 ஓட்டங்களால் கோல் கெலன்ட்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

அங்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்க, 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களைக் குவித்தார்.

இதற்கு மேலதிகமாக, அவுஸ்திரேலிய வீரர் சாம் ஹார்பர் 19 பந்துகளில் வேகமாக 40 ஓட்டங்களை (4×8, 6×1) தனது அணியிக்காக பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய அணியின் தலைவர் தசுன் ஷானக 12 பந்துகளில் 31 ஓட்டங்களையும் (4×2, 6×3) சஹான் ஆராச்சிகே 35 ஓட்டங்களையும் (4×7) பெற்றனர்.

214 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணியால் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

ஜப்னா அணி சார்பில் துனித் வெல்லாலகே (40 ஓட்டங்கள்) மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ (34 ஓட்டங்கள்) ஆகியோர் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்திய போதிலும், ஏனைய துடுப்பாட்ட வீரர்களால் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இப்போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் முன்னாள் இந்திய வீரர் பியூஷ் சாவ்லா மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க மற்றும் தற்போதைய நமீபிய வீரர் டேவிட் வைஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு வீரர்கள் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button