இலங்கைதமிழீழம்தமிழ்

ஆசிய நாடுகளின் தூதுவர்கள் ஐவர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்! அபிவிருத்தி குறித்து ஆராய்வு

தமிழீழம் கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் நேற்று (11) மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர்.

மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல், மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

தூதுவர்கள் பாரம்பரிய மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபை சார்பில் மாநகர எல்லைக்குள் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள், அவற்றை மேம்படுத்த தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாநகரசபையின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பும் உதவியும் வழங்குமாறு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்வின் நிறைவில், ஐந்து நாடுகளின் தூதுவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி அபிவிருத்தித் திட்ட முன்மொழிவு அறிக்கைகளும் கையளிக்கப்பட்டன.

மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகர ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

திருகோணமலை

மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர்  ஜயந்த லால் ரத்னசேகராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் (09) நடைபெற்றது.

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கேள்விக்குட்பட்ட சுற்றுலாத் தளங்கள் குறித்து தூதுவர்களும் ஆளுநரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக அமையக்கூடிய இடங்களை இந்தத் தூதுக்குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்கே.குணநாதன், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உட்பட  பலரும் கலந்துகொண்டனர்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button