இலங்கைதமிழீழம்தமிழ்

‘அதிகாரத் திமிரில் மாணவிகளின் வாழ்வை சீரழிக்காதே’ யாழ்.பல்கலையில் போராட்டம்

பேராசிரியருக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை துரிதமாக்க கோரிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர்  உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்துமாறு கோரி  யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் காலத்தை இழுத்தடிக்காது விசாரணைகளை துரிதப்படுத்த கோரி, பல்கலைக்கழகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , “பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’. “பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்” , ” குற்றத்தை மறைக்க சட்டத்தை ஆயுதமாக்காதே … ” கண்ணியத்தை இழந்து கல்வியை பெறும் இடமா யாழ் பல்கலைக்கழகம் “,  தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே பாலியல் சுரண்டல்களுக்கு மௌனம் ஏன் ? ” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே வேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் தொடர்பான அவதூறான கூற்றுக்களை பிரசுரித்தனர் மற்றும்அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேருக்கு எதிராகவும், முகநூல் தளங்கள், வலையொளி தளங்கள், ரிக்ரொக் தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, மேலும் நிகழ்நிலை காப்புச்சட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டமையும் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button