இலங்கை

கித்துள் குளத்தில் மீன்பிடி உரிமை கோரி மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் குளம் பகுதியில் மீனவர்களும் பொதுமக்களும் இணைந்து நேற்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 

 

 

மேலும், கித்துள் துறைமுக பகுதியில் தோணிகளில் இருந்தவாறு பதாதைகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், பின்னர் அங்கிருந்து கித்துள் பிரதான வீதி வரை பேரணியாகச் சென்று வீதியோரத்தில் நின்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

 

 

 

இந்நிலையில், கித்துள் குளத்தில் தடையின்றி மீன்பிடியில் ஈடுபடவும், தங்களது தோணிகளை அங்கேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் அனுமதிக்க கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

 

 

அத்துடன், கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும், தோணிகளை அங்கேயே நிறுத்தி வைப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 

 

 

இதேவேளை கடந்த சில மாதங்களாக உறுகாமம் பகுதி மீனவ சங்கத்தின் அழுத்தம் காரணமாக, அதிகாரிகள் தங்களை உறுகாமம் பகுதியில் தோணிகளை நிறுத்துமாறு வற்புறுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

 

இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் நேரில் வருகை தந்து மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

 

 

 

குறித்த இடத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இப்பிரச்சினை குறித்துக் கேட்டறிந்தார்.

 

 

 

அடுத்த வாரம் இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து சுமுகமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, இரு தரப்பினருக்கும் சாதகமான நியாயமான முடிவை பெற்றுத்தருவதாக சிறிநாத் போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

 

 

 

இதனைத் தொடர்ந்து இறுதியில், மீனவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் நிறுத்தப்பட்டுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button