
மாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, தமிழ் அரசியல் கட்சிகளை அல்ல, மாறாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களையே அவர் தரக்குறைவாக மதிப்பிடுவதை பிரதிபலிக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சாடியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மாகாண சபை தேர்தலை எள்ளி நகையாடி வருவதாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், “நாடு முழுவதும் இல்லாவிட்டாலும், வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்காவது மாகாண சபை தேர்தலை நடத்துமாறு” தான் கோரிய போது, அரசாங்கத்தின் பதில் வெறும் ‘சிரிப்பாகவே’ அமைந்தது என கவலை வெளியிட்டார்
முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சக்கள் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் செய்த தவறுகளைத் திருத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அதே பிழைகளையே தொடர்வதாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களைச் சந்திக்க (தேர்தலை எதிர்கொள்ள) அஞ்சுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இனி இனவாதம் மீண்டும் தலைதூக்க முடியாது எனத் தெரிவித்த அவர், இலங்கையில் இனவாத அரசியலை இல்லாமலாக்கியது ‘அரகலய’ எனப்படும் காலிமுகத்திடல் போராட்டம் ஊடாக வீதிக்கு வந்த சிங்கள மக்களே தவிர, தேசிய மக்கள் சக்தி (NPP) அல்ல என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார். சிங்கள இனவாதத்தைத் தோற்கடிக்க சிங்கள மக்களே முன்னின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
காலிமுகத்திடல் போராட்டத்தின் உழைப்பை மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன்று அப்படியே கைப்பற்றிச் சென்றுள்ளது. அவர்கள் மாத்திரமல்ல, நாமும் காலம் காலமாக இனவாதத்திற்கு எதிராகவே செயல்பட்டோம்.
ஆனால், அதன் அரசியல் பலனை இன்று மக்கள் விடுதலை முன்னணி அறுவடை செய்துள்ளது. எனினும், இனவாதத்திற்கு எதிரான சக்திகளை ஒழிக்க அரசாங்கம் முற்பட்டால், நாம் அதற்கு எதிராக முன்நிற்போம்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்





