
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கு வருகை தந்தார். தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்த அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
இதேவேளை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருடன் அவரது மகளும் இயக்குநருமான சௌந்தர்யாவும் வந்து வாக்கினைப் பதிவு செய்தனர்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாகத் தங்களது வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்” என்று அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே பல பிரபலங்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





