
நுகர்வோரை ஏமாற்றி எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால்,லாஃப் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை மூன்று இலட்சம் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை இன்று சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
எரிவாயு தட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சிங்களப்பத்திரிகை ஒன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
எதிர்வரும் 25 ஆம் திகதி 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட கப்பலொன்றும்,எதிர்வரும் 28 ஆம் திகதி 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட மற்றொரு கப்பலொன்றும் நாட்டிற்கு வரவுள்ளன.
இதற்கமைய, இன்று முதல் மூன்று இலட்சம் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
லாஃப் எரிவாயு தொடர்பான நெருக்கடி:
லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
அமைச்சின் அதிகாரிகள் மற்றும் லாஃப் நிறுவன பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டார். நுகர்வோரை ஏமாற்றி எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால், அந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
லாஃப் எரிவாயு விநியோகம் தொடர்ந்தும் மந்தகதியில் காணப்பட்டால், அந்த நுகர்வோர் லிட்ரோ எரிவாயுவிற்கு மாறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், அவர்களுக்குத் தேவையான எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்ய லிட்ரோ நிறுவனம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மார்ச் 12 ஆம் திகதிக்குள் லாஃப் நிறுவனம் தனது நுகர்வோருக்குப் போதுமான அளவு எரிவாயுவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, மார்ச் மாதத்தில் தற்போதைய மாதத்தை விட மூன்றில் ஒரு பங்கு (1/3) எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





