இலங்கை

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினம் இன்றாகும்

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினமான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் நான்கு கால சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெறுகின்றன.

 

மகாசிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை மகாசிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள்.

 

இந்த ஆண்டுக்குரிய மகாசிவராத்திரி விரதத்தை இன்று மாலை 06 மணிக்குப் பிறகு தொடங்கி இரவு முழுவதும் சிவனை வழிபட்டு,

பக்தி முறையை கடைப்பிடிப்பது மிகவும் சிறந்தது.

 

இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவது பழமையான ஆன்மீக மரபாகும்.

 

சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள், வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, முன் நாள் மாலை 5:51 மணிக்கு துவங்கும் சதுர்த்தசி திதியிலிருந்து தங்கள் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

 

இந்த ஆண்டின் சதுர்த்தசி திதி நாளை 16 மாலை 6:26 மணிக்கு நிறைவடைகிறது. இதற்குப் பிறகு அமாவாசை திதி துவங்கி, விரதத்திற்கான சிறப்பு நேரம் நிறைவடைகிறது.

 

எனவே விரதம் மற்றும் இரவு முழுவதும் சிவ வழிபாடு செய்ய விரும்புபவர்கள், இன்று மாலை 6 மணிக்குப் பிறகு தங்கள் வீட்டிலும் கோயிலிலும் விரதத்தைத் தொடங்கலாம்.

 

மகாசிவராத்திரியில் பக்தர்கள் நான்கு காலங்களாக பிரித்து இரவு முழுவதும் சிவனை வழிபடுவது வழக்கம்.

 

சிலர் ஒவ்வொரு காலத்திலும் சிறிய பூஜைகள் மற்றும் நெல்லிக்காய், பால், பழம் போன்றவற்றை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள்.

 

இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலம், பல பிறவிகளில் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என்றும், மன அமைதி மற்றும் ஆன்மிக சக்தியை அதிகரிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

 

உலகம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்ட காலத்தில், அன்னை பார்வதி உலக உயிர்களுக்காக தவம் இருந்து இறைவனை பூஜித்தார். அந்த இரவே சிவராத்திரி நாளாகும். பார்வதிதேவி தவமிருந்து, சிவ பெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றது சிவராத்திரி தினமாகும். உமாதேவி சிவபெருமானிடம் ஆகம உபதேசம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான்.

 

பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் யார் உயர்ந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் முடிவில்லாத ஒளிப் பீடமாக ஜோதி ஸ்தம்பமாக தோன்றினார்.பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து ‘பாசுபதம்’ என்னும் அஸ்திரத்தை பெற்றதும் இந்த சிவராத்திரி தினமே. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்த நாள் மகாசிவராத்திரி. பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் சிவராத்திரி தினத்தில்தான்.

 

கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் மகாசிவராத்திரி நாளில்தான். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், லிங்க ரூபமாக சிவபெருமானின் அருள் வழங்கிய நாள் மகா சிவராத்திரியாகும்.

 

ஆகவே மகாசிவராத்திரி வழிபாட்டின் முக்கிய அம்சம் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை நினைத்து பூஜை செய்வது. பக்தர்கள் இந்த நேரத்தில், சிவலிங்கத்திற்கு நீர், பால், மஞ்சள், பூக்கள், மற்றும் நெய் போன்ற பொருட்களை ஊற்றிக் கையால் வழிபாடுகளை செய்கின்றனர். இதனால் பக்தர்கள் மனம் சுத்தமாகி, தேவையான ஆசீர்வாதங்களைப் பெறுவதாக நம்பப்படுகிறது. இந்த விரதம் ஆன்மீக வளர்ச்சிக்கும், உடல் நலனுக்கும், மன அமைதிக்கும் வழிவகுக்கும் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button