
இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவின் கோராபுட் (Koraput) மாவட்டத்தில் அசைவ உணவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு, பொதுமக்கள் மற்றும் பழங்குடியின தலைவர்களின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கோராபுட் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் திகதியன்று மாவட்டம் முழுவதும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்ட அனைத்து அசைவ உணவுகளையும் விற்பனை செய்யத் தடை விதிப்பதாக அறிவித்திருந்தா
இதைக் கண்காணிக்குமாறு கிராம அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாவட்டத்தில், இத்தகைய உத்தரவு மக்களின் உணவு சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறி கடும் கண்டனங்கள் எழுந்தன.
“மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை ஆட்சியர் தீர்மானிக்க முடியாது. இது பழங்குடியின மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்” எனவும் பழங்குடியினத்தவர்களுக்காக மக்கள் பிரதிநிதி ஒருவர் சாடியுள்ளார்.
அத்துடன்,”குடியரசு தினம் என்பது சுதந்திரத்தைப் பற்றியது, கட்டாயப்படுத்துவது அல்ல. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒரு குடியரசு தினத்தில் பறிப்பது சட்டவிரோதமானது” என்று மற்றுமொரு அரசியல்வாதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
புள்ளிவிவரங்களின்படி, ஒடிசா மாநில மக்கள் தொகையில் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே சைவ உணவைப் பின்பற்றுபவர்கள். குறிப்பாக, பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் கோராபுட் போன்ற பகுதிகளில் அசைவ உணவு என்பது அவர்களின் வாழ்வியலில் ஒரு முக்கியப் பகுதியாகும்.
இந்த நிலையில் மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர், “குடியரசு தினத் தயாரிப்புக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு அந்தத் தடை உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் ஒடிசா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





