
யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கான தெரிவில், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முதல் நிலையைப் பெற்றுள்ளார்.
தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் விளக்கமளிப்பு இன்று (டிசம்பர் 09, செவ்வாய்க்கிழமை) விசேட பேரவைக் கூட்டத்தில் நடைபெற்றது.
மதிப்பீட்டு நடைமுறை:
யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. விண்ணப்பதாரர்கள் இன்று பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பங்கள் மற்றும் விளக்கமளித்தலுக்கான மதிப்பீடுகளைச் செய்து தனித்தனியாகப் புள்ளிகளை வழங்கினர்.
உள்வாரி உறுப்பினர்கள் விலகல்:
மதிப்பீட்டில் பங்குபெறவிருந்த பீடாதிபதி தெரிவு குறித்து உள்வாரிப் பேரவை உறுப்பினர் ஒருவரால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பீடாதிபதி, மதிப்பீட்டில் கலந்து கொள்ளவில்லை. மேலும், துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பீடாதிபதிகளும் உள்வாரி உறுப்பினர்களாக இருந்த போதிலும், அவர்கள் மதிப்பீட்டில் பங்குபற்றவில்லை. இதனால், வெளிவாரி உறுப்பினர்களின் செல்வாக்கே மதிப்பீட்டில் அதிகமாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் மூன்று இடங்கள்:
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று பேர் பின்வருமாறு:
சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி: முதல் நிலை
சிரேஷ்ட பேராசிரியர் கு. மிகுந்தன்: (விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதி) இரண்டாம் நிலை
பேராசிரியர் இ. சுரேந்திரகுமாரன்: (மருத்துவ பீடாதிபதி) மூன்றாம் நிலை
ஜனாதிபதி நியமன முறை:
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி, பேரவையினால் முன்மொழியப்பட்ட இந்த மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து, துணைவேந்தராக நியமனம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.





