
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (24) அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று (22) பிரதேச சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட தாந்தாமலை கிராமத்திலே அமைந்திருக்கின்ற எங்களுடைய பாரம்பரிய, பூர்வீகமாக, எங்களுடைய இந்து மதத்தை பேணி பாதுகாக்கின்ற வழிபாட்டுத்தலமாக இயங்குகின்ற எங்களுடைய முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் (22) யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக வந்து தொல்பொருள் திணைக்களம் ‘தொல்பொருள் இடம்’ என்ற பெயர்ப்பலகையை மாட்டிவிட்டு சென்றிருக்கின்றார்கள். உண்மையாகவே அவர்கள் ஒரு திணைக்களமாக நாங்கள் பார்க்கவில்லை. ஏன் என்று சொன்னால் ஒரு திணைக்களத்துக்கு தெரி வேண்டும் இந்த பிரதேசத்திலே பிரதேச சபையின் ஊடாக பிரதேச சபையின் அனுமதி எடுத்த பின்பு தான் ஒரு பெயர்ப்பலகை மாற்றலாம் என்று. ஆகவே அதை நாங்கள் ஒரு திணைக்களமாக பார்க்கவில்லை. அவர்கள் பௌத்த மதத்தினுடைய கொள்கைகளை பரப்புகின்ற ஒரு திணைக்களமாகத்தான் நாங்கள் அதை பார்க்கின்றோம்.
இது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். இது சிங்கள மக்களை பாதுகாக்கின்ற திணைக்களம் மட்டுமல்ல, அவர்களுடைய அந்த மதத்தை பரப்புகின்ற ஒரு திணைக்களமாகவும் நாங்கள் இதைப் பார்க்கின்றோம். உடனடியாக அவர்கள் அந்த பெயர்ப்பலகையை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத பட்சத்தில் இன்று நாங்கள் அதனை சென்று பார்வையிட்டு வந்திருக்கின்றோம்.
ஆகவே உடனடியாக அவை மாற்றப்பட வேண்டும். அகற்றாத பட்சத்தில் எமது மக்கள் இணைந்து போராட்டம் வெடிக்கும். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி அவர்களுடைய இந்தச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இதனை நாங்கள் எந்த ஒரு வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம்.
ஆகவே எங்களுடைய மக்கள், எங்களுடைய பிரதேசம். நமது பிரதேசத்தில் இருக்கின்ற இந்து ஆலயங்களை நாங்கள் மையப்படுத்தி அதாவது 99 வீதம் இந்து மத மக்கள் வாழ்கின்ற ஒரு இடமாக இந்தப் பிரதேசம் காணப்படுகின்றது.
ஆகவே இவ்வாறான ஒரு நயவஞ்சகத்தை அவர்கள் செய்யக்கூடாது. நான் இன்று உடனடியாக உரிய திணைக்களத்திற்கு எழுத்து மூலமாக ஒரு கடிதம் ஒன்றினை அனுப்பி இருக்கின்றேன். ஆகவே இவர்கள் உடனடியாக அந்தப் பெயர்ப்பலகையை அகற்றாத பட்சத்தில் நான் திங்கட்கிழமைக்கு பிறகு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எதிர்பார்த்து இருக்கின்றோம்.
இது அவர்களுக்கு கூறுகின்ற ஒரு திணைக்களம் என்ற முறையில் இதனை நாங்கள் கூறி வைக்க விரும்புகின்றோம். இல்லாத பட்சத்தில் இன்றே நாங்கள் அதனை அகற்றி இருப்போம். நாங்களும் ஒரு அரச திணைக்களம். எனவே அவர்கள் இதனை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நாங்கள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதனை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.





