
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் இருந்து காந்தி பூங்காவினை நோக்கி பேரணி ஒன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திற்கு அருகில் உயிர்நீர்த்த உறவுகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரும் வகையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பேரணியானது ஆரம்பமானது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வேதனைகளையும், நீதிக் கோரிக்கையினை சுமந்தவாறு வாகன ஊர்தி முன்செல்ல வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பேரணியானது மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்றது.
ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை எந்தியவாறும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதிய கல்லடி பாலம் ஊடாக மட்டக்களப்பு பிரதான வீதியூடாக மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் ஊர்வலம் வருகை தந்ததுடன் காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் தமிழ் மக்களின் உரிமைக்காக ஊடகப் பணியாற்றி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழினவழிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை கோரிய வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் பிரதான போராட்டமாக நடந்த இந்தப் போராட்டமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்றதுடன் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி செல்வராணி, திருகோணமலை மாவட்ட தலைவி தேவி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பெருமளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

மேலும் பொது அமைப்புக்களும், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப்போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் 2500 இற்கும் மேற்பட்டோர் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது போராட்டத்தினைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினால் ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்புவதற்கான மகஜர் வாசிக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகினால் இந்த மகஜர் வாசிக்கப்பட்டது.
அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கொண்ட ஒரு நாட்டில் நீதிக்கான எங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்து வருகிறோம். இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், நீதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது உலகளவில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் முழு மக்களுக்கும் எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது தோன்றிய பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சமூகங்களை இலக்கு வைத்து இன ஒடுக்குமுறையின் கருவியாக மாறியுள்ளன. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் என்பது மிகவும் நயவஞ்சகமான ஆயுதமாகும், இது முழு சமூகத்திற்கும் நீண்டகால துயரத்தையும், உளவியல் சித்திரவதைகளையும் ஏற்படுத்துகிறது.
ஈழத்தை பொறுத்தவரையில், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கவில்லை. எமது உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே இலங்கை அரசானது ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக் கருவியாக இதனை பாவித்து வந்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்த இலங்கையின் இனப்படுகொலை போரின் இறுதிக் கட்டத்தில், 146,679 பேர் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். அவர்களது உறவினர்களால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் 21,000 இற்கும் மேற்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டு பலவந்தமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஒரு திட்டமிட்ட தந்திரோபாயமாக இலங்கையால் பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது அவர்களின் திட்டமிட்ட இனவழிப்புக்கு கணிசமாக பங்களித்துள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில், 59 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என சர்வதேசத்திடம் நீதி வேண்டி தொடர்ந்து போராடி வருகிறோம். 59 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதில் இலங்கை உலகில் முன்னணியில் உள்ளது.
சிறுவர் உரிமைகளை நிலைநிறுத்தவும், இனப்படுகொலையை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசை திருப்திப்படுத்துவதும், கால அவகாசம் கொடுப்பதும் எமது மக்களுக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றது. தமிழர் உரிமைப் போராட்டத்தின் போது, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் உட்பட சரணடைந்தவர்களின் கதி என்ன என்பதை இலங்கை அரசு வெளிப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து மிக விரைவாக சர்வதேச விசாரணை ஆரம்பிக்க வேண்டும்.
போர் முடிவடைந்த பின்னர், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் 350 இற்கும் மேற்பட்ட உறவினர்கள் நீதிக்காக போராடும் போது, தங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி மன்னாரில் உள்ள சதொசா புதைகுழி ஆகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இலங்கையில் இரண்டாவது மனிதப் புதைகுழியாக தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வரும் செம்மணி சித்துப்பாத்தி இந்துமயான புதைகுழி பதிவாகியுள்ளது. குழந்தைகள் உட்பட 169 பேரின் எலும்புக்கூடுகள்வ அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நேரத்தில் 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன. மேற்படி புதைகுழி எவையும் விசாரிக்கப்படவில்லை. அத்துடன் எமது தாயகத்தின் ஏனைய வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சிங்கள இராணுவம் மற்றும் சிங்கள காடையாளர்களால் எம் உறவுகள் கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும் இடங்களிலும் அகழ்வுப் பணிகள் நடைபெற வேண்டும். எனவே சர்வதேச சுயாதீன விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என ஐ. நா மன்றத்தை கோருகின்றோம்.
இலங்கை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி A/u;RC/60/21 இலக்கமிட்ட தங்களது அறிக்கை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சில அடிப்படை பிரச்னைகளை குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நீங்கள் இதுவரை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றவாளிகள் தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட சர்வதேச போர்க் குற்றங்களுக்கு நீண்ட காலமாக தாமதித்து வந்த நீதியையும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் தற்போதைய ஐனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு இராஐதந்திர அடிப்படையில் நீங்கள் அழைப்பு விடுத்துள்ளீர்கள். பொறுப்புக்கூறல் தொடர்பான தங்களது மேற்படி கருத்து கடந்த 76 ஆண்டுகளாக ஸ்ரீலங்கா அரசினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்தும் கட்டமைப்புசார் இனவழிப்புக்கு முகம் கொடுத்தவாறு சர்வதேச நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்களாகிய எமக்கு பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வருகின்ற 8 ஆம் திகதி செம்டெம்பர் மாதம் தொடங்கவுள்ள ஐ. நா மனித உரிமை கூட்டத்தொடரில்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் உரியவர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக உண்மை கண்டறியப்பட்ட பதில் விரைந்து வழங்குவதுடன், பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டமிட்ட இனப்படுகொலை மேற்கொண்ட இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்படுத்தி விசாரனை ஆரம்பிக்க தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும், உறுப்பு நாடுகளையும் கோருகின்றோம். நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்காக சர்வதேச பொறிமுறைகளின் ஊடாகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
போர் முடிவடைந்து 16 வருடங்களாக நீதி கோரியும் பின் இன்றுடன் 3114 நாட்கள் தொடர்ச்சியாக வீதிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது போராட்டத்தை இலங்கை அரசால் அடக்க முடியாது. இன்று, எங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடுவதற்கு, இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேச பொறிமுறைகள் மூலம் தேடுகின்ற எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





