
ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஈடாக, டான்பாஸ் பகுதியை ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் யுக்ரைன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும், எதிர்காலத் தாக்குதல்களுக்கு இது தளமாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த போதே செலென்ஸ்கி இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் “சில பிரதேசங்களை மாற்றுவதை” உள்ளடக்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
யுக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸின் சில பகுதிகளை ரஷ்யாவுக்கு வழங்க வேண்டும் என்ற புடினின் கோரிக்கையை மையப்படுத்தியே ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில், ரஷ்யாவின் துருப்புக்கள் யுக்ரைனின் கிழக்கு நகரமான டோப்ரோபிலியா அருகே திடீரென முன்னேறி, குறுகிய காலத்தில் 10 கிலோமீற்றர் வரை முன்னேறியுள்ளன.
இதனை செலேன்ஸ்கி ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனினும், இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட படைப்பிரிவுகளை யுக்ரைன் விரைவில் அழித்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.





