
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1 – 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருக்கும் இந்தியா, கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (31) ஆரம்பமான கடைசிப் போட்டியில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எனினும் கருண் நாயர், வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி இந்தியாவுக்கு கை கொடுத்தனர்.
இந்தப் டெஸ்ட் போட்டியிலும் நாணய சுழற்சியில் தோல்வி அடைந்தைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆரம்ப வீரர்கள் யஷஸ்வி ஜய்ஸ்வால் (2), கே. எல். ராகுல் (14) ஆகிய இருவரும் 16 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (38 – 2 விக்.)
அணித் தலைவர் ஷுப்மான் கில், சாய் சுதர்சன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் தடைப்பட்டு வேளையோடு பகல் உணவு எடுக்கப்பட்டது.
இரண்டு மணி நேரத்தின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.\
சாய் சுதர்சனுடன் ஷுப்மான் கில் 73 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இல்லாத ஓர் ஓட்டத்தை எடுக்க முயற்சித்த ஷுப்மான் கில் 21 ஓட்டங்களுடன் அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.
அவர் ரன் அவுட் ஆன சற்று நேரத்தின் பின்னர் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டு வேளையோடு தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக தடைப்பட்ட ஆட்டம் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்தது.
அதன் பின்னர் சாய் சுதர்சன் (38), ரவிந்த்ர ஜடேஜா (9), த்ருவ் ஜுரெல் (19) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (153 – 6 விக்)
எனினும் கருண் நாயர், வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 51 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை கௌரவமான நிலையில் இட்டனர்.
கருண் நாயர் 98 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 52 ஓட்டங்களுடனும் வொஷிங்டன் சுந்தர் 45 பந்துகளில் 2 பவுண்டறிகள் உட்பட 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் கஸ் அட்கின்சன் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் டங் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
60 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சாளர்கள் நால்வரையே பந்துவீச்சில் பயன்படுத்திய இங்கிலாந்து 62ஆவது ஓவரில் பகுதிநேர சுழல்பந்துவீச்சாளர் ஜேக்கப் பெத்தலை முதல் தடவையாக பயன்படுத்தியது. அவர் 2 ஓவர்கள் வீசிய போதிலும் அவரால் 7ஆவது விக்கெட் இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போனது.





