ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய் உள்ள நாடு) தங்க இறக்குமதி விதிகள் கடுமையாக்கப்பட்டன. ஆனால் அவை கிட்டத்தட்ட அமுலாகவில்லை என்று புதிய ஆய்வு சொல்கிறது. அந்தத் தங்கத்தை உலகிலேயே அதிகம் வாங்கும் நாடு சுவிஸ்தான்.
ஆய்வை செய்தது Swissaid என்ற சுவிஸ் உதவி அமைப்பு. தங்கச் சுத்திகரிப்பு ஆலைகள் விதிகளைப் பின்பற்றுகின்றனவா என்பது இப்போது முன்பை விடத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு மேல் பெரிய மாற்றம் இல்லை. சோதனை செய்யப்பட்ட பெரும்பாலான ஆலைகள் புதிய விதிகளை மீறுகின்றன. அமீரக அரசு அபராதம் போடத் தொடங்கியது. ஆனாலும் அதனால் பலன் இல்லை.
கடத்தல் தங்கமும், போர் நடக்கும் பகுதிகளில் இருந்து வரும் தங்கமும் 2024-ல் கிட்டத்தட்ட 600 டன் அமீரகத்துக்குள் வந்தன. சென்ற ஆண்டு சுவிஸ் அங்கிருந்து 420 டன் தங்கம் வாங்கியது. இந்த ஆண்டும் அளவு மிக அதிகமாகவே உள்ளது.
இந்தத் தங்கம் பெரும்பாலும் டிசினோ மாநிலத்தில் (Ticino) உள்ள Valcambi என்ற ஒரே ஆலைக்குப் போகிறது. அதன் தலைவர் சொல்வது: அமீரகத் தங்கத்தை ஒதுக்கிவிட முடியாது, சுத்தமான வழியில் வாங்க முயற்சிப்போம். மற்ற பெரிய சுவிஸ் ஆலைகள் அங்கிருந்து கிட்டத்தட்ட வாங்குவதே இல்லை. சுவிஸ் தங்க வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும் துபாயிலிருந்து தங்கம் வாங்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறார். அதனால் இந்தத் துறையே இரண்டு பக்கமாகப் பிரிந்திருக்கிறது.
சுவிசில் விலைமதிப்புள்ள உலோகங்களைக் கண்காணிக்கும் சட்டத்துக்கான விதிமுறைகள் இப்போது தயாராகின்றன. அவை கடுமையாகவும் தெளிவாகவும் இருந்தால், சந்தேகத்துக்குரிய தங்கம் சுவிசுக்குள் வருவதை நிறுத்தலாம் என்கிறது Swissaid. இறுதி விதிமுறைகள் அடுத்த ஆண்டுதான் வரும்.
மூலம்: SRF
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash





