தமிழீழம்

தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய ஆளுமை எம்.கே. சிவாஜிலிங்கம் சற்றுமுன் காலமானார்!

தமிழ்த் தேசிய அரசியலில் நீண்டகாலமாகச் செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்.

சிறுநீரகப் பாதிப்பு காரணமாகக் கடந்த ஜூன் மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர், பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் அரசியல் பயணம்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ (TELO) ஊடாக அரசியலில் முக்கியத்துவம் பெற்றவர்.

2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

2004ஆம் ஆண்டிலும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி, 2010ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் பணியாற்றினார்.

2010 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டமை அவரது அரசியல் பயணத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று மாகாணசபை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

2025ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராகத் தெரிவாகி, மீண்டும் உள்ளூராட்சி அரசியலில் முக்கிய பொறுப்பை ஏற்றிருந்தார்.

தமிழ்த் தேசிய அரசியலில் தனித்துவமான குரல்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அரசியல் தீர்வு, தமிழின அழிப்பிற்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை ஆகிய கோரிக்கைகளைத் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை மற்றும் ஏனைய நாடுகளிடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தவர் சிவாஜிலிங்கம்.

குறிப்பாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நினைவேந்தல், தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை முன்னெடுப்பதில் தீவிரமாகச் செயற்பட்டார்.

பல்வேறு தடைகள், பொலிஸ் விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தமை அவரது அரசியல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முடிவுகளுடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்டு, தனித்த அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியவராகவும் அறியப்பட்டார்.

தனது வெளிப்படையான கருத்துகளாலும், சர்ச்சைக்குரிய அரசியல் நிலைப்பாடுகளாலும், தொடர்ச்சியான போராட்டச் செயற்பாடுகளாலும் தமிழ்த் தேசிய அரசியலில் தனித்த அடையாளத்தைப் பதித்தவர் எம்.கே. சிவாஜிலிங்கம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் சுகயீனமுற்று உடல்நல குறைவினால் அல்லலுற்ற போது ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் ஒளிந்திருக்க, இலங்கை அரசாங்கத்தின் அனைத்து அச்சுறுத்தல்களையும் தாண்டி தலைவரின் தாயாருக்கான மருத்துவ உதவி மற்றும் அவரது இறப்பிற்கான இறுதிக்கிரிகைகள் ஆகியவற்றையும் தனிமனிதனாக முன்னெடுத்தவர்.

அவரது மறைவு, தமிழ்த் தேசிய அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையின் இழப்பாக அமைந்துள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button