சூரிக்கிலிருந்து (Zürich) லுகானோ (Lugano) போகும் ட்ரெயினுக்குள் ஒருவர் ராக்லெட் சீஸ் உருக்கிச் சாப்பிட்ட வீடியோ இப்போது பெரிய பேச்சாகியுள்ளது. இது சுட்ஓஸ்ட்பான் (Südostbahn) என்ற சுவிஸ் ரயில் நிறுவனத்துக்குப் பிடிக்கவில்லை.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டவர் சமையல் இன்ஃப்ளூயென்சர் இமானுவேல் சார்பாக் (Emanuel Sarbach). குடும்பங்கள் உட்காரும் பெட்டியில் அவர் ராக்லெட் அடுப்பை வைத்து சீஸை உருக்கினார். இது ஒரு விளம்பர வீடியோ. சிலிஸ் (Zyliss) என்ற நிறுவனத்தின் புதிய ராக்லெட் கருவியை விளம்பரப்படுத்தவே இதை எடுத்தார்கள். இந்தக் கருவியில் புகையும் வாசனையும் குறைவு என்கிறார்கள்.
சிலர் இதை விமர்சித்தார்கள். திடீரென ட்ரெயின் நின்றால், சூடான அடுப்பும் உருகிய சீஸும் ஆபத்தாகும் என்று 17 வயது இளைஞர் ஒருவர் எழுதினார். மற்றவர்கள் இதைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்றும் கேட்டார். ஆனால் வேறு சிலருக்கு வீடியோ பிடித்திருந்தது. இன்னும் வித்தியாசமான இடங்களில் ராக்லெட் செய்யலாம் என்று அவர்கள் கலகலப்பாகக் கருத்து போட்டார்கள்.
ரயில் நிறுவனம் தெளிவாகச் சொல்லிவிட்டது. ராக்லெட் எங்களுக்கும் பிடிக்கும், ஆனால் ஓடும் ட்ரெயினில் வேண்டாம் என்கிறார்கள். படப்பிடிப்புக்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. வீடியோ வெளியான பிறகுதான் தங்களுக்குத் தெரிந்தது என்றும் சொன்னார்கள். ட்ரெயினில் உள்ள பிளக் பாயிண்ட்கள் போன், லேப்டாப் சார்ஜ் செய்வதற்கு மட்டுமே. வீட்டு உபயோகக் கருவிகளுக்கு அதிக மின்சாரம் தேவை. அதனால் ட்ரெயினின் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம். சூடான கருவி கீழே விழுந்தால் தீக்காயமும் ஏற்படலாம். இந்த விஷயத்தை நிறுவனம் உள்ளுக்குள் விசாரிக்கிறது. நடவடிக்கை எடுப்பதா என்பதை அதன் பிறகு முடிவு செய்யும்.
சிலிஸ் நிறுவனமும் வீடியோவை எடுத்த விளம்பர நிறுவனமும் (Offroad) மன்னிப்புக் கேட்டுள்ளன. எழுத்துப்பூர்வ அனுமதி வாங்கவில்லை என்று ஒப்புக்கொண்டன. பாதுகாப்புதான் முக்கியம் என்றும், படப்பிடிப்பு முழுவதும் ஒருவர் ராக்லெட் கிரில்லை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளன.
மூலம்: Le Matin
புகைப்படம்: Andra C Taylor Jr / Unsplash





