குளிர்காலம் நெருங்குகிறது. சுவிஸில் வீடுகளை சூடாக்கும் ஹீட்டிங் எண்ணெயின் இருப்பு குறைந்து வருகிறது.
இப்போதைக்கு எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் அளவு குறைவு. சுவிஸில் 10 வீடுகளில் கிட்டத்தட்ட 6 வீடுகள் இன்னும் எண்ணெய், வாயு போன்ற எரிபொருளில்தான் சூடாகின்றன. அவற்றில் மூன்றில் ஒரு வீடு எண்ணெயைப் பயன்படுத்துகிறது.
மூன்று காரணங்களால் சிக்கல் வந்துள்ளது. முதலாவது வறட்சி. ரைன் (Rhine) ஆற்றில் தண்ணீர் மிகவும் குறைவு. அதனால் கப்பல்கள் சிறிய அளவு சரக்கை மட்டுமே கொண்டு வருகின்றன. இரண்டாவது ட்ரெயின். கப்பலுக்குப் பதிலாக ட்ரெயினில் கொண்டு வரலாம். ஆனால் தண்டவாளங்கள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக ஜெர்மனியில் இடம் இல்லை என்று சுவிஸ் ரயில்வே (CFF) சொல்கிறது. மூன்றாவது விலை. ஈரான் போரால் விலை ஏறியது. விலை குறையும் என்று நினைத்து பலர் எண்ணெய் வாங்குவதைத் தள்ளிப்போட்டார்கள். இப்போது இன்னும் காத்திருக்க முடியாது.
எல்லோரும் ஒரே நேரத்தில் வாங்கினால் சுவிஸுக்குள் விநியோகமே நின்றுபோகலாம் என்ற அச்சம் உள்ளது. அவசரம் வந்தால் அரசு தன் சேமிப்பு இருப்பை வெளியே விடத் தயாராக உள்ளது. வேகக் கட்டுப்பாடு, மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வேண்டுகோள் போன்றவற்றையும் பரிசீலிக்கிறது.
டிச்சீனோ மாநிலத்தில் (Ticino) பயம் இல்லை. அங்கு லாரிகள் மூலம் கிட்டத்தட்ட எல்லா எண்ணெயும் இத்தாலியிலிருந்து வருகிறது. இந்தக் குளிர்காலத்தில் சுவிஸின் மற்றப் பகுதிகளிலிருந்து வாங்க மாட்டோம் என்று அங்குள்ள எண்ணெய் வியாபாரிகள் சங்கத் தலைவர் சொல்கிறார். கடந்த வாரம் எண்ணெய் விலை சற்றுக் குறைந்துள்ளது.
மூலம்: RSI
புகைப்படம்: Mandell Smock / Unsplash





