சுவிஸ்

இளைஞர்களை வைத்துத் திருட்டு: சுவிஸில் இரட்டிப்பான புதிய குற்றம்

சுவிஸில் திருட்டு வேலைக்கு இளைஞர்களைப் பணம் கொடுத்துப் பயன்படுத்தும் குற்றங்கள் இந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளன. இதைச் சுவிஸ் மத்திய காவல்துறை அலுவலகம் (Fedpol) தெரிவித்துள்ளது.

இதற்கு “crime-as-a-service” என்று பெயர். பிரான்ஸைச் சேர்ந்த குற்றக் கும்பல்கள் தாங்களே திருடுவதில்லை. வேறு ஆட்களை வைத்துத் திருட வைக்கிறார்கள். பெரும்பாலும் அனுபவம் இல்லாத இளைஞர்கள். ஸ்னாப்சாட், டிக்டாக், டெலிகிராம் வழியாக அவர்களைப் பிடிக்கிறார்கள். வேலை முடிந்தால் 500 முதல் 10,000 யூரோ வரை தருவதாகச் சொல்கிறார்கள்.

வொர்க்ஷாப்கள், வாகனங்களில் திருட்டு அதிகம். துப்பாக்கிக் கடைகள், நகைக் கடைகள், ATM களிலும் திருட்டு நடந்துள்ளது. வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே உள்ளே புகுந்து திருடும் சம்பவங்களும் கூடியுள்ளன. அவற்றில் வன்முறையும் அதிகம்.

இளைஞர்கள் திருடும்போது தங்களையே வீடியோ எடுக்க வேண்டும். அந்த வீடியோவை வைத்து அவர்களை மிரட்டி, மேலும் குற்றங்களைச் செய்ய வைக்கிறார்கள். வேலையை முடிக்காவிட்டால் பழிவாங்குவார்கள். சுவிஸ் இளைஞர்களும் சிலர் இதில் சிக்கியுள்ளனர். ஒரு சம்பவத்தில் 14 வயதுச் சிறுவனும் இருந்தான்.

இதைத் தடுக்க மத்திய அரசும் சில மாநிலங்களும் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளன. Fedpol அமைப்பும் சூரிச் மாநிலப் (Zürich) போலீசும் அதற்குத் தலைமை தாங்குகின்றன. வீட்டுக்குள் திருடன் புகுந்தால் அவனை எதிர்க்க வேண்டாம். பாதுகாப்பான இடத்துக்குப் போய் 117 க்கு அழையுங்கள் என்று டிச்சினோ மாநிலப் (Ticino) போலீஸ் கூறுகிறது.


மூலம்: RSI
புகைப்படம்: Martin Podsiad / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button