கிராவுபுண்டன் மாநில (Graubünden) அரசு, உக்ரைன் அகதிகளுக்குக் கொடுக்கும் சமூக உதவியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இது பற்றிய அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
2027 மார்ச்சில், முதலில் வந்த உக்ரைன் அகதிகள் சுவிஸில் 5 ஆண்டுகள் முடித்திருப்பார்கள். அப்போது அவர்களுக்கு B அனுமதி (நிலையாகத் தங்கும் அனுமதி) கிடைக்கும். இப்போது அவர்களிடம் இருப்பது S அனுமதி, அது தற்காலிகமாகத் தங்கும் அனுமதி. B அனுமதி வந்தால், உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும் அதே சமூக உதவி அவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
ஆனால் புகலிடத் துறைக்குக் கொடுக்கும் பணத்தை சுவிஸ் மத்திய அரசு 2027-இல் குறைக்கிறது. அதனால் கூடுதல் செலவை மாநிலமும் நகராட்சிகளும் ஏற்க வேண்டியிருக்கும். கிராவுபுண்டனில் அடுத்த மார்ச்சில் 960 பேருக்கு B அனுமதி கிடைக்கும். அவர்களில் 640 பேர் இப்போது சமூக உதவி பெறுகிறார்கள். கூடுதல் செலவு கிட்டத்தட்ட 6 மில்லியன் பிராங்க் ஆகும்.
இதைச் சமாளிக்க, மாநில அரசு ஒரு யோசனையை முன்வைத்துள்ளது. B அனுமதி கிடைத்தாலும், உக்ரைன் அகதிகள் அனைவருக்கும் S அனுமதிக்கான உதவி மட்டுமே கொடுக்கப்படும் என்பதுதான் அது. இந்த யோசனை டிசம்பர் கூட்டத்தொடரில் மாநிலத் தலைநகர் கூர் (Chur) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
மூலம்: RSI
புகைப்படம்: Luis Wittenberg / Unsplash





