சுவிஸின் ஜூரா மாநிலப் (Jura) பகுதியில் ஒரு விசித்திர நோயால் சுமார் 25 குதிரைகள் இறந்துள்ளன. குதிரைகள் ஒரு வகை மரத்தின் விதைகளைத் தின்றதே காரணம்.
பேர்ன் மாநிலத்தில் (Berne) உள்ள கோர்ட்டபேர் (Cortébert) ஊரில் ஒடீ ஸ்டூலே கைசர் (Audrey Steulet Geiser) குதிரைப் பண்ணை நடத்துகிறார். இறந்த குதிரைகளில் பாதிக்கு மேல் அவருடையவை. 13 குதிரைகளை இழந்துவிட்டார். அவர் பிறந்த நாளிலிருந்தே கையில் வளர்த்த இரண்டரை வயது குட்டிக் குதிரையும் அதில் ஒன்று. சனிக்கிழமையிலிருந்து அவரது குதிரைகள் பேர்ன், ஆர்காவ், சூரிக் ஆகிய இடங்களின் மிருக வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கெல்லாம் இடம் நிரம்பியிருந்தது.
சனி, ஞாயிறு நாட்களில் பலத்த காற்று வீசியது. கோடை வறட்சியால் பலவீனமான மரங்களிலிருந்து விதைகள் ஒரு மாதம் முன்பே உதிர்ந்தன. இவை சைக்காமோர் மேப்பிள் (érable sycomore) மர விதைகள். குதிரைகளுக்கு இவை நஞ்சு. விதைகள் வயல்களிலும் தண்ணீர்த் தொட்டிகளிலும் ஓடைகளிலும் விழுந்தன. நஞ்சு தசைகளைத் தாக்குகிறது. குதிரை சோர்ந்து படுத்துவிடும். மூச்சு விட சிரமப்படும். எழுந்திருக்கவே முடியாது. இதற்கு மாற்று மருந்து இல்லை.
பணநஷ்டமும் பெரியது. வைத்தியச் செலவு மட்டும் ஏறக்குறைய 100,000 பிராங்க். இந்த நோய் மற்ற குதிரைகளுக்குத் தொற்றாது. அதனால் இதற்கான அரசு நிதி கிடைக்காது. எனவே இணையத்தில் நிதி திரட்டும் பக்கம் (Gofundme) தொடங்கியுள்ளனர்.
இது மீண்டும் நடக்கும் என்று ஒடீ அஞ்சுகிறார். இந்த மரங்களை வெட்ட முடியாது, ஏனெனில் அவை சட்டப்படி பாதுகாக்கப்பட்டவை. விதைகளைக் கையால் பொறுக்குவதும் முடியாத வேலை. அதனால் வரும் ஆண்டுகளில் குதிரைகளை ஒரு மாதம் முன்பே கொட்டிலுக்குள் கொண்டுவந்து, வசந்த காலம் வரை அங்கேயே வைக்க வேண்டும். நீண்ட காலத் தீர்வாக மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Jon Tyson / Unsplash





