
இலங்கையின் தென்கிழக்குக் கரையோர சர்வதேசக் கடற்பரப்பில் மருத்துவ அவசரநிலைக்கு உள்ளான 40 ஈரானிய மாலுமிகளை மீட்டு, மருத்துவ சிகிச்சை வழங்கிய பின்னர் அவர்களை விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பியனுப்பியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானியக் கப்பல்களிடமிருந்து சனிக்கிழமை அவசர மருத்துவ உதவி கோரும் அழைப்பு கிடைத்ததாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தால் திட்டமிடப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கையில், உள்ளூர் கப்பல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.
மீட்கப்பட்ட மாலுமிகள் கரைக்குக் கொண்டுவரப்பட்டு, கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் சனிக்கிழமை இரவு விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த மாலுமிகள் வெவ்வேறு கப்பல்களில் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் எத்தனை கப்பல்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் இலங்கை அதிகாரிகளிடம் இல்லை.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை காரணமாக ஈரானியக் கப்பல்கள் கடலில் சிக்கியுள்ள நிலையில், மருத்துவ அவசரநிலைகளின்போது சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை வழங்குவது இலங்கையின் கடமை என ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த உதவி ஈரானியக் கப்பல்களுக்கு பொதுவான ஆதரவை வழங்குவதாகப் பொருள்படாது என்றும், அவசர உதவி கோரும் அழைப்புகளுக்குப் பதிலளிப்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்தியத்தில் மோதல் தீவிரமடைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பாதிப்புகள் சர்வதேச வர்த்தகத்தையும் பாதித்துள்ளன.
இந்த மோதலில் இலங்கை நடுநிலை வகித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் முன்வைக்கப்பட்ட இராணுவ அணுகல் கோரிக்கைகளை இலங்கை நிராகரித்துள்ளதுடன், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணுமாறும் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் டோர்பிடோ தாக்குதலுக்குப் பின்னர் இலங்கைக் கரையோரத்தில் மூழ்கிய ஈரானியக் கப்பலான IRIS Dena தொடர்பான அவசர அழைப்புக்கும் இலங்கை அதிகாரிகள் பதிலளித்திருந்தனர். அந்தச் சம்பவத்தில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை, இலங்கைக் கரையோரப் பகுதிகளுக்கு அருகில் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவித்த 19 ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக உதவி வழங்கும் திட்டம் இல்லை என இலங்கை அதிகாரிகள் இம்மாதத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தனர். தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.




