இலங்கைதமிழீழம்

PSTA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் போராட்டம்!

அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு கோரி வடக்கு கிழக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் யாழில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனுர அரசே புதிய பயங்கரவாத சட்டமும் வேண்டாம் பழைய பயங்கர வாதச் சட்டமும் வேண்டாம் என்ற வாசகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முடிவில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அனுப்பிய மகஜர் வாசிக்கப்பட்டது.
இதேவேளை பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (9) மட்டக்களப்பு நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடிப்படை அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட பேரணிப் பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

குறிப்பாக ‘பிஎஸ்ரிஏ’ சட்டமூலம் வேண்டாம்…!” என்ற பிரதான பதாகையுடன் திரண்ட அவர்கள், “நாங்கள் கேட்டது மாற்றம்; ஆனால் கிடைத்தது ஏமாற்றம்!” என்ற வாசகம் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.  மேலும், “அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் வேண்டாம்!”, “சட்டம் பாதுகாக்க வேண்டும்; மாறாக பயமுறுத்தக் கூடாது!” மற்றும் “கேட்பது ஜனநாயகம்; தருவது அடக்குமுறை” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button