
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக, ஈரான் ஆதரவு யேமன் ஹூதி கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சவுதியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் தீப்பற்றி கடுமையாகச் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஹூதிகள் தமது தாக்குதலுக்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. சவுதி அரேபிய அதிகாரிகளும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
வியாழக்கிழமை விமான நிலைய முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சவுதியா விமானம் தீப்பற்றியதில், இடைமறிக்கப்பட்ட ஏவுகணையிலிருந்து சிதறிய பாகங்கள் அல்லது வேறொரு ஏவுகணைத் தாக்கத்தின் காரணமாக விமானம் கடுமையாகச் சேதமடைந்திருக்கலாம் எனத் தகவலறிந்த மூவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்றபோது விமானத்தில் பயணிகள் எவரும் இருந்ததாக நம்பப்படவில்லை. எனினும், யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் வெடிப்புகள் – விமானச் சேவைகள் இடைநிறுத்தம்
ரியாத்தில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவக் குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் ஒருவர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து கரும்புகையும் தீப்பிழம்புகளும் மேலெழும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்றையும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத அந்தச் சாட்சி, புறப்படவிருந்த விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும், பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
லுஃப்தான்சா மற்றும் ஏர் இந்தியா ஆகிய விமான நிறுவனங்கள் ரியாத்துக்கான தமது விமானச் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
விமானப் போக்குவரத்துத் தரவுகளைத் தொகுக்கும் Cirium நிறுவனத்தின் தகவலின்படி, வியாழக்கிழமை கிரீன்விச் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ரியாத் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானங்களில் ஏறத்தாழ பாதி ரத்து செய்யப்பட்டிருந்தன. சவுதி அரேபியாவின் விமான நிலையங்களில் வெள்ளிக்கிழமை மேலும் 31 விமானச் சேவைகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் ஹூதிகள்
இதற்கிடையில், ரியாத் மற்றும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அப்ஹா விமான நிலையங்கள் மீது இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்திருந்தனர்.
வியாழக்கிழமை சவுதி அரேபியா மீதான தாக்குதல்களை ஹூதிகள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். நாட்டின் வான்வெளியில் விமானப் போக்குவரத்தை முடக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ள அவர்கள், தங்களின் அடுத்த இலக்குகளாக எரிசக்தி நிலையங்கள் குறிவைக்கப்படலாம் என எச்சரித்து, அங்கு பணியாற்றுவோர் விலகி இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில், இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறிய பாகங்கள் ரியாத்தில் உள்ள சிறுவர் மழலையர் பள்ளி மற்றும் மருத்துவ வளாகம் மீது விழுந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு: ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான ஹூதிகளின் கூற்று சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.





