
வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் இன்று மாலை தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் வசித்துவந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை உறவினர் இருவர் குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த அலஸ்கிறின் (வயது 60) என்ற பெண்ணும் அவரது மகனான அயந்தன் (வயது 35) என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதே வேளை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி மத்திப்பகுதியில் வயோதிப தாயார் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்
74 வயதுடைய விஜயலட்சுமி என்ற மூதாட்டியே மேற்படி உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் மூதாட்டியும் அவருடைய மகனும் வசித்துவந்த நிலையில் நேற்று மூதாட்டி வீட்டில் சடலமாக காணப்பட்டதை பொலிசாருக்கு அயலவர்கள் அறிவித்திருந்த நிலையில் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
வீட்டில் பொருட்கள் வீசப்பட்டு அடிகாயங்களுடன் மூதாட்டி சடலமாக காணப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
பரிசோதனையில் கொலை என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மூதாட்டியின் மகன் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
குறித்த மகன் கடந்த சிலவருடங்களுக்கும் முன்னர் பணத்தினை எடுத்து வீதியில் வீசி அட்டகாசம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





