
Facebook மற்றும் Instagram தளங்களின் தாய் நிறுவனமான Meta, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடை கடந்த டிசம்பரில் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜூன் மாதம் வரை 4.62 லட்சம் Instagram கணக்குகளும், 2.94 லட்சம் Facebook கணக்குகளும்செயலிழக்கச் செய்யப்பட்டதாக Meta கூறியுள்ளது.
ஜனவரி மாதம் வரை 3.31 லட்சம் Instagram மற்றும் 1.73 லட்சம் Facebook கணக்குகள் நீக்கப்பட்டதாக Meta முன்னதாக தெரிவித்திருந்தது.
குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் உடல் மற்றும் மனநலத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த கவலைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அரசு இந்த உலகின் முதல் வயது அடிப்படையிலான சமூக ஊடகத் தடையை அறிமுகப்படுத்தியது.
Meta உள்ளிட்ட பல சமூக ஊடக நிறுவனங்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்திருந்தாலும், சட்டத்திற்கு இணங்க நடவடிக்கை எடுத்து வருவதாக Meta தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய இணைய ஒழுங்குமுறை அமைப்பு, சட்டத்தை போதுமான அளவில் அமல்படுத்தவில்லை எனக் கூறப்படும் சில சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
ஆஸ்திரேலிய அரசின் புள்ளிவிவரங்களும் பல்வேறு சுயாதீன ஆய்வுகளும், தடை அமலுக்கு வந்த முதல் மூன்று மாதங்களிலும் 16 வயதுக்குட்பட்டவர்களில் 80%-க்கும் அதிகமானோர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இருந்ததாககாட்டுகின்றன.
AI மூலம் வயதைக் கண்டறியும் Meta
16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகளை அடையாளம் காண AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக Meta தெரிவித்துள்ளது.
ஒருவரின் கணக்கு 16 வயதுக்குட்பட்டவருடையதாக இருக்கலாம் என்பதற்கான குறிப்புகளை, அவர்களின் சுயவிவரத் தகவல்களில் Meta ஆய்வு செய்கிறது. உதாரணமாக:
- பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பான பதிவுகள்
- பள்ளி வகுப்பு அல்லது தரம் குறித்த தகவல்கள்
- வயதுக்குட்பட்ட பயனாளர்கள் குறித்து பெறப்படும் புகார்கள்
போன்ற தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
மேலும், ஏற்கனவே நீக்கப்பட்ட கணக்கிற்குப் பதிலாக புதிய கணக்கை உருவாக்க ஒருவர் மீண்டும் மீண்டும் முயற்சிப்பதற்கான வாய்ப்பையும் Meta கட்டுப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், Meta, TikTok, Google-ன் YouTube மற்றும் Snap-ன் Snapchat ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற விசாரணையில் சாட்சியமளிக்க உள்ளனர்.
சட்டத்தை மீறுவதற்கான அதிகபட்ச அபராதத்தை 99 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை இரட்டிப்பாக்கவும், ஒழுங்குமுறை அமைப்புக்கு அதிக ஆவணங்களை கோரும் அதிகாரங்களை வழங்கவும் ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.





