இலங்கைதமிழீழம்தமிழ்

ஈழக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் அட்டகாசம்; உறவை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மீனவர்கள் கோரிக்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால்  தீவக கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து,  அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, மண்டைதீவு, மற்றும் புங்குடுதீவு கடற்தொழிலாளர்களின் வலைகளை அறுத்து நாசமாகியுள்ளனர்.

இதனால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளமையால் , எமது தொழிலாளர்கள் பல இலட்சம் நஷ்டமடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அந்த வலைகளை வேண்டி தொழில் செய்வதற்கு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

வலைகளை இழந்த தொழிலாளிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்க கூட எவரும் இல்லை. யாரை குறை சொல்வது  யாரிடம் சென்று முறையிடுவது என தெரியாத நிலையில் , அனாதரவாக தொழிலாளிகள் நிற்கின்றனர்.

எங்கள் நாட்டு அரசாங்கத்திடம் கடற்தொழில் அமைச்சர் ஊடாக  தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரி வருகிறோம். கடற்படையினர் முழுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு , தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதேநேரம் , தமிழக முதலமைச்சர் விஜயிடமும் தயவான வேண்டுகோளை முன் வைக்கிறோம். காரைக்கால் , புதுக்கோட்டை , இராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலாளர்களை எல்லை தாண்டி செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்துங்கள். அவர்களால் எங்கள் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகிறது.

தொப்புள் கொடி உறவுகள் என கூறிக்கொள்ளும் இரு தரப்பினருக்கும் இடையில் எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சனைகள் , முரண்பாடுகள் வராது தடுத்து நிறுத்துங்கள்

இரு நாட்டு அரசாங்கமும் மீனவர் பிரச்சனையை பேசி தீர்வினை பெற வேண்டும். தமிழக அரசும் , இது தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button