இலங்கை

இலங்கை நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளித்தது எதிர்க்கட்சி

நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (21) நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் எதிர்க்கட்சியால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் கையொப்பங்களுடன் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

காவலில் இருந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பையும் கடமையையும் நீதியமைச்சர் நிறைவேற்றத் தவறியதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், 2024 நவம்பர் 25 ஆம் திகதியிடப்பட்ட 2412/08 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த சிறைச்சாலை மறுசீரமைப்பு, நிர்வாகம், கைதிகள் புனர்வாழ்வு, சிறைச்சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நெரிசலைக் குறைப்பது உள்ளிட்ட பொறுப்புகளை அவர் முறையாக நிறைவேற்றவில்லை என்றும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அலட்சியங்களே நீர்கொழும்பு சிறைச்சாலை நெருக்கடிக்கு நேரடியாக காரணமாக அமைந்ததாக எதிர்க்கட்சி தனது நம்பிக்கையில்லா பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button