இலங்கைதமிழீழம்தமிழ்

வலி வடக்கு மக்களின் 6000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்துச்செய்ய வேண்டும்

தமிழீழம் யாழ் வலிவடக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நீக்க வேண்டுமென சமூக  பொருளாதார மேம்பாட்டிற்கான  நிறுவனத்தின் இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ். மயிலிட்டியில் 13 ஆவது வாரமாக காணி  விடுவிப்புக்கான போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணிகள் மக்களுக்கு என கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பதில் தயக்கம் காட்டுகிறது.

2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்ட வலி வடக்கு மக்களின் சுமார் 6000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை இரத்துச் செய்யப்படவில்லை.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மற்றும் பலாலி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் பாதிக்கமட்ட மக்களின் குரல்களுக்கு தற்போதைய அரசாங்கமும்  செவி சாய்க்காமல் கடந்த கால அரசாங்கங்களைப் போல அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு இயங்கும் அரசாங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய வளமான காணிகளை கையகப்படுத்தி 35 வருடங்கள் கடந்து  விட்ட நிலையில் இன்று வரை பாதிக்கப்பட்ட மக்கள் தமது காணிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்புத் தேவையென காணியை சுவீகரித்துவிட்டு மக்களின் காணிகளில் விவசாயம் செய்து இராணுவம் மரக்கறிகளை  விற்று வருமானம் ஈட்டுகிறார்கள் இது நாட்டின் திறைசேரிக்கா செல்கிறது.

ஆகவே மக்களின் காணிகள் மக்களுக்கு எனக் கூறிவரும் அரசாங்கம் விரைவாக மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதோடு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கருக்கான வர்த்தமானியையும் உடனடியாக நீக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button