இலங்கை

யாழ். ஜெய்ப்பூர் புனர்வாழ்வு நிலையத்தின் புதிய செயற்கைக்கால் திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தின் மீள்திறப்பு விழாவும், புதிய செயற்கைக் கால் தயாரிப்புத் திட்டத்தின் ஆரம்ப விழாவும் இன்று (26) காலை இடம்பெற்றது.

 

 

 

இந்நிகழ்வானது யாழ்ப்பாணம், சுண்டிக்குளி, கொழும்புத்துறை வீதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 

 

 

இதன்போது, இந்தியாவின் ஜெய்ப்பூர் செயற்கைக் கால் பொருத்தும் நவீன முறையை யாழ்ப்பாணத்திலேயே அறிமுகப்படுத்தி, பயனாளிகளுக்கு அதனை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

 

 

இந்நிலையில்,புனரமைக்கப்பட்டகட்டிடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன், பயனாளிகளுக்கான செயற்கைக் கால்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

 

 

இந்த புதிய செயல் திட்டமானது,, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனங்கள் மற்றும் லண்டன் ஸ்கூல் ஒவ் கொமர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டிம் அண்ட்ராடி ஆகியோரின் நிதியுதவி மற்றும் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

 

 

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர்,கோரிக்கை ஒன்றை முன் வைத்தார். ஜெய்ப்பூர் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக எமது மண்ணில் அளப்பரிய சேவையாற்றி வருவதாகவும், போரால் எமது மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு, கை கால்களை இழந்திருந்த நெருக்கடியான காலகட்டத்தில், அவர்களுக்கு அருமருந்தாக அமைந்தது இந்த நிறுவனமேயாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும்,இந்நிறுவனம் எமது மண்ணில் இயங்கியிருக்காவிட்டால், எமது மக்களில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இந்நிறுவனத்துக்குப் போதியளவான அரச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை எனவும், தான் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில், அப்போது அமைச்சின் செயலாளராக இருந்த அமரர் சிவஞானசோதி அவர்களின் ஒத்துழைப்புடன் சில உதவிகளைப் பெற்றுக்கொடுத்திருந்ததாகவும் நினைவுகூர்ந்தார்.

 

 

 

இன்றும் எமது மண்ணில் விபத்துக்களாலும், நீரிழிவு போன்ற நோய்களாலும் பலர் தமது கை கால்களை இழக்கின்ற நிலையில், அவர்களுக்கு இந்நிறுவனத்தின் சேவை அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளது எனவும், எமது மக்களுக்குப் பொருத்தமான வகையிலும், உயர் தரத்திலும், இலகுவாக அணுகக்கூடிய முறையிலும் இங்கு செயற்கை கை கால்கள் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

இந்த நிறுவனத்தைப் புனரமைத்து, எமது மக்களுக்கு இலவசமாகச் சேவையாற்றுவதற்குத் தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்ட ஆளுநர், இந்நிறுவனம் தனது சேவையைத் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுக்கத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 

 

 

அத்துடன் இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைத் தலைவர் திருமதி கோசலை மதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் கௌரவ சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிகச் செயலாளர் ஜெயகரன், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர்கள், சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களான மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button