இலங்கை

புலிகளிடமிருந்த நகைகள் விரைவில் நீதிமன்றுக்கு

‘‘விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் உரிமையாளர்களின் விவரம் தொடர்பில் இராணுவத்திடம் எவ்வித தகவலும் கிடையாது. இன்னும் 03 மாத காலத்துக்குள் அந்தத் தங்கநகைகள் நீதிமன்றத்துக்கு ஒப்படைக்கப்படும்’’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கடந்த பாராளுமன்ற அமர்வொன்றில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

 

‘‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களிடமிருந்து இராணுவத்தினர் தங்கநகைகள் எதனையும் கைப்பற்றவில்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விடுதலைப் புலிகளின் களஞ்சியசாலைகளில் இருந்து சுமார் 150 கிலோ பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் உரிமையாளர்களின் விபரம் குறித்து இராணுவத்திடம் எவ்வித தகவலும் கிடையாது.

 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவு, தங்க ஆபரணங்கள் அதிகார சபை மற்றும் இலங்கை மத்திய வங்கி ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது நீண்டதொரு செயற்பாடு. இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்து இன்னும் 03 மாத காலத்துக்குள் குறித்த தங்கநகைகளை நீதிமன்றத்துக்கு கையளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியில் உரித்துள்ளவர்களுக்கு அவர்களின் தங்க நகைகள் வழங்கப்படும்

 

2014ஆம் ஆண்டு தமது அடையாளங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திய 2015 பேருக்கு அவர்களது தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆவணங்களை உறுதிப்படுத்துபவர்களுக்கு அவர்களின் தங்க நகைகள் ஒப்படைக்கப்படும். புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் தேர்தல் பிரசாரங்களிலும் எவ்வித வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை’’ என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button