இலங்கை

மிதக்கும் சந்தை இப்போது ‘மிதக்கும் நரகம்’: அவசர மறுசீரமைப்புக்கு உத்தரவு!

கொழும்பு நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட புறக்கோட்டை மிதக்கும் சந்தை தொகுதி, தற்போது ஒரு ‘மிதக்கும் சந்தை’யாக அன்றி, ஒரு ‘மிதக்கும் நரகமாக’ மாறியுள்ளதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

 

பேரே ஏரி மற்றும் மிதக்கும் சந்தை தொகுதியின் தற்போதைய நிலையை நேரில் ஆராய்வதற்காக மேற்கொண்ட கள விஜயத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த கால அரசியல் தீர்மானங்களால் இந்தத் திட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

2014 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் 92 கடைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது 16 கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன.

போதிய பராமரிப்பின்மை காரணமாகக் மர மற்றும் உலோகக் கட்டுமானங்கள் முற்றாகத் தூர்ந்துபோயுள்ளன. இதனால் இத்தொகுதி பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளது.

 

மின்சாரக் கட்டமைப்புக்கள் செயலிழந்துள்ளதால், இரவு வேளைகளில் இது சட்டவிரோத செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் இடம்பெறும் இடமாக மாறியுள்ளதாக அமைச்சர் கவலை வெளியிட்டார்.

பெஸ்டியன் மாவத்தை மற்றும் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையை இணைக்கும் குறுக்கு வழியாக இந்த மிதக்கும் சந்தையை மக்கள் பயன்படுத்தி வந்தனர். எனினும், அங்குள்ள இரும்புத் தகடுகள் மற்றும் கைப்பிடிகள் கழன்று விழுந்துள்ளதால், பாதசாரிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

 

நிலைமையை நேரில் கண்டறிந்த பிரதி அமைச்சர்,

 

உடனடியாக ஆபத்தான இடங்களைச் சீர்செய்து, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.

கழிவுகள் மற்றும் உடைந்த பொருட்களை அகற்றி, பேர ஏரியின் மேற்பரப்பை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் மூலம் தினசரி தூய்மைப்படுத்துதல்

மும்மொழிகளிலும் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) பாதுகாப்பு மற்றும் அறிவித்தல் பலகைகளைத் காட்சிப்படுத்துதல் போன்ற திட்டங்களை செயற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

 

65 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட பேர ஏரியைத் தற்போதைய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கத் நிலையான அபிவிருத்தித் திட்டம் ஒன்றை உருவாக்க அமைச்சர் திட்டமிட்டுள்ளார். இதற்காக கிழக்கு பேர, மேற்கு பேர மற்றும் கங்காராம பேர ஆகிய மூன்று முக்கிய இடங்களை அவர் அவதானித்தார்

மேலும், சிதைவடைந்துள்ள கம்பிப் பாலம் மற்றும் ‘கலாதுவ’ பூங்கா வளாகத்தையும் நவீன தரத்திற்கு ஏற்ப மீளக் கட்டியெழுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button