
OpenAI நிறுவனம் தனது ஆரம்பகால இலட்சியங்களைக் கைவிட்டு, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஈலோன் மஸ்க் கலிபோர்னியா கூட்டாட்சி நீதிமன்றத்தில் மீண்டும் சாட்சியமளித்தார்.
2015-ல் ஒரு இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட OpenAI, 2019-ல் இலாப நோக்குடைய நிறுவனமாக மாற்றப்பட்டதை மஸ்க் கடுமையாக எதிர்த்தார்.
“ஒரு தொண்டு நிறுவனத்தைச் சூறையாடுவதை அனுமதித்தால், அமெரிக்க அறக்கட்டளை அமைப்புகளின் அடிப்படையே தகர்ந்துவிடும்” என்று அவர் வாதிட்டார்.
ஈலோன் மஸ்க் இந்த வழக்கின் மூலம் 150 பில்லியன் டொலர் இழப்பீடு கோரியுள்ளார்.
இந்தத் தொகை OpenAI-இன் தொண்டுப் பிரிவிற்கே செல்ல வேண்டும் என்றும், நிறுவனம் மீண்டும் இலாப நோக்கமற்ற அமைப்பாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மஸ்க் தனது சொந்த AI நிறுவனமான ‘xAI’-ஐ வலுப்படுத்தவும், OpenAI-ஐக் கட்டுப்படுத்தவுமே இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக அந்நிறுவன வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
நிதித் தேவைக்காகவே இலாப நோக்கு அமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் கண்டனம்
‘X’ தளத்தில் சாம் ஆல்ட்மேனைத் தாக்கிப் பதிவிட்டதற்காக நீதிபதி இவோன் கொன்சாலஸ் ரோஜர்ஸ் மஸ்க்கைக் கண்டித்தார்.
இதனைத் தொடர்ந்து தனது சமூக ஊடகச் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ள மஸ்க் ஒப்புக்கொண்டார்.
தற்போது 1 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டில் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) OpenAI தயாராகி வரும் நிலையில், இந்த வழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கின் இரு பெரும் ஜாம்பவான்களான மஸ்க் மற்றும் ஆல்ட்மேன் இடையிலான மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.





