
பங்களாதேஷில் சுமார் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சி, 2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான பாரிய போராட்டங்களால் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று (பெப்ரவரி 12) நடைபெறுகிறது.
இன்று காலை 7:30 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4:30 மணி வரை நடைபெறவுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் கடந்த 18 மாதங்களாக நாட்டை வழிநடத்தி வந்தது.
முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் (Awami League) கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, ‘ஜூலை சாசனம்’ (July Charter) எனப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த தேசிய பொது வாக்கெடுப்பும் (Referendum) முதன்முறையாக நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர் புரட்சியின் மூலம் கிடைத்த ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதே இத்தேர்தலின் பிரதான நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.





