
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணும் நாடுகளுக்கு மேலதிக இறக்குமதி வரிகளை (Tariffs) விதிப்பதற்கான நிறைவேற்று ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
ஈரானிடம் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் மற்றும் சேவைகளைப் கொள்வனவு செய்யும் அல்லது வர்த்தகம் செய்யும் நாடுகளின் மீது அமெரிக்கா மேலதிக வரிகளை விதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையில் குறிப்பிட்ட வரி விகிதம் எதுவும் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு உதாரணமாக 25 சதவீத (25%) வரி விதிக்கப்படலாம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டம், பயங்கரவாதத்திற்கான ஆதரவு மற்றும் பிராந்திய ஸ்திரமின்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்த நாட்டின் வருமான வழிகளை முடக்குவதற்காக இந்த “அதிகபட்ச அழுத்தம்” கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகச் செயலாளர் மற்றும் இராஜாங்கச் செயலாளர் ஆகியோர் இணைந்து, எந்தெந்த நாடுகள் ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பதைத் தீர்மானித்து, இந்த வரி விதிப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சீனா, இந்தியா மற்றும் துருக்கி போன்ற ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளாக இருக்கும் நாடுகளுக்குப் பெரும் பொருளாதாரச் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





