
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கை தடகள வீரர்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கும் விவகாரம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு உலக அளவில் விளையாட்டுத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஐடஹோ மற்றும் மேற்கு வெர்ஜீனியா ஆகிய மாநிலங்கள், பிறப்பால் ஆண்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதித்துச் சட்டம் இயற்றின.
இந்த சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட மேன்முறையீட்டு வழக்குகளையே ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்காவின் 24-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இத்தகைய தடைகளை விதித்துள்ளன.
ஐடஹோ பல்கலைக்கழக வீரர் ஒருவராலும், மேற்கு வெர்ஜீனியாவில் பாடசாலை மாணவி ஒருவராலும் இந்தச் சட்டங்கள் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டன.
முன்னதாக, கீழ் நீதிமன்றங்கள் இந்தத் தடை பாலின பாகுபாடு என்றும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் தீர்ப்பளித்திருந்தன.
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கிய நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார்.
“இனிமேல் பெண்கள் விளையாட்டு என்பது பெண்களுக்கு மட்டுமே” என்று அறிவித்த அவர், மாற்றுப் பாலினத்தவர்களை அனுமதிக்கும் பாடசாலைகளுக்குச் வழங்கப்படும் மத்திய நிதி ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழக நீச்சல் வீராங்கனை லியா தாமஸ், பெண்கள் பிரிவில் போட்டியிட்டது இந்த விவாதத்தைத் தீவிரம் அடையச் செய்தது.
ஆண்களுக்கான அணியில் விளையாடிய அவர், பின்னர் பெண்கள் பிரிவில் வென்றது மற்ற வீராங்கனைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகம் மாற்றுப் பாலினத்த வீரர்களுக்குத் தடை விதித்தது.
தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பழமைவாத நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இந்தத் தடை உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே மாற்றுப் பாலினத்தவர்களுக்கான மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் இராணுவப் பணி தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





