
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த றம்புக்கணை முதல் கண்டி வரையான தொடருந்து சேவைகளை ஒரு வருடத்துக்குள் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
றம்புக்கணை முதல் பேராதெனிய வரையிலான தொடருந்து மார்க்கம் அதிகளவில் சேதமடைந்துள்ளதாகப் போக்குவரத்து பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
இதனை புனரமைக்க சுமார் 74 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்பதுடன், பேராதெனிய யக்கா பாலத்தை புனரமைப்பதற்கு மாத்திரம் சுமார் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடுமையாக சேதமடைந்துள்ள கம்பளை முதல் நாவலப்பிட்டிய வரையிலான தொடருந்து மார்க்கத்தை புனரமைப்பதற்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாவலப்பிட்டிய முதல் நானு ஓயா வரையிலான பகுதியையும் புனரமைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புனரமைப்பு பணிகளுக்குத் தேவையான நிதியில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்றும், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியினால் 500 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.





