
யாழ்ப்பாண விமான நிலையத்தில் அண்மையில் மனிதாபிமான உதவிகளை வழங்கிய அமெரிக்காவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்ததோடு, தமிழ் மக்களின் இறைமையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் ஆதரவையும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், தமிழ் மக்களின், எமது இறைமையை மீட்டெடுக்க வலுவான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருமுறை பெரிய இராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்கா மனிதாபிமான உதவிகளை வழங்கியபோது, அதனை எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது சிவில் அமைப்புகளோ அங்கீகரிக்கவோ அல்லது நன்றி தெரிவிக்கவோ இல்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
புத்தாண்டு தினமான இன்று வவுனியாவில் 3,237-வது நாளாகத் தொடரும் தமது சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் உறுப்பினர்கள், “காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் குறித்த உண்மையை வெளிப்படுத்த அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.





