இலங்கைதமிழீழம்

இலங்கையில் தொடர் மழை; நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்- விவசாயிகள் பரிதவிப்பு

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் தொடர்ச்சியான பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நிந்தவூர் விவசாயப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

பால் பிடிக்கும் பருவத்திலும், அறுவடைக்கு தயாராகும் நிலையிலும் இருந்த நெற்பயிர்கள் பலத்த காற்றினால் சாய்ந்துள்ளதுடன், தொடர்ச்சியான மழையால் வயல் நிலங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், நீரில் நீண்ட நேரம் மூழ்கிய நெல் மணிகள் முளைக்க ஆரம்பித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் உரிய முறையில் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் அதிகரித்த நீர்வரத்து காரணமாக நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வு, உரம் மற்றும் விதை நெல் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், கடன் பெற்று விவசாய செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இந்த பாதிப்பு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கமநல சேவை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, விரைவாக பயிர்ச்சேத மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க அரசாங்கமும் விவசாயக் காப்பீட்டுச் சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button