இலங்கை

மீனவர்களுக்கு விசேட நிவாரணம்: படகுகளை இலவசமாகத் திருத்த நடவடிக்கை

வெள்ளப்பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மீன்பிடித் தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 7,649 மில்லியன் ரூபா பெறுமதியான விசேட மறுசீரமைப்புத் திட்டத்தை மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து விளக்கிய அவர், இந்த அனர்த்தத்தினால் அதிகபட்சமாக நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் துறைக்கே 5,850 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக அலங்கார மீன்கள், இறால் மற்றும் கடல் அட்டை வளர்ப்புத் துறைகள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கைகள் காரணமாகப் பாரிய உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குப் படகுகளைத் திருத்துவதற்கும் புதிய உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முழுமையாகப் பாதிக்கப்பட்ட படகுகளுக்குக் காப்புறுதித் தொகையுடன் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படவுள்ளதுடன், பகுதியளவில் சேதமடைந்த அனைத்துப் படகுகளையும் சீ-நோர் (C-Nor) நிறுவனம் அந்தந்த இடங்களிலேயே இலவசமாகத் திருத்தித் தரும்.

மேலும், வலைகளை இழந்த 1,200-க்கும் மேற்பட்ட கடல் மீனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான வவுச்சர்களும், 6,000 நன்னீர் மீனவர்களுக்கு தலா 75,000 ரூபா வரையான நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, நன்னீர் மீன்பிடித் துறையைப் பொறுத்தவரை, சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு இதுவெனக் குறிப்பிட்ட அதிகாரிகள், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த 699 குளங்களில் மீண்டும் மீன் குஞ்சுகளை விடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைின் தலைவர் கித்சிறி தர்மபிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டுள்ள நடுத்தர மற்றும் பாரிய அளவிலான வர்த்தகர்கள் மீண்டும் தொழிலைத் தொடங்க, அரச வங்கிகள் ஊடாக விசேட கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த நிவாரணப் பணிகள் அனைத்தும் ஐவர் கொண்ட குழுவின் கண்காணிப்பின் கீழ் மிகவும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button