
பண்டிகை காலத்தை முன்னிட்டு, கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்காகவும், மீண்டும் தலைநகர் திரும்புபவர்களுக்காகவும் விசேட போக்குவரத்துச் சேவைகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகியன இணைந்து இந்த சேவைகளை முன்னெடுத்துள்ளன.
இதன்படி வழமையான நேர அட்டவணைகளுக்கு மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக கடவத்தை, கடுவலை மற்றும் மாகும்புர ஆகிய நிலையங்களை மையமாகக் கொண்டு நீண்டதூர பேருந்து சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் காலி மற்றும் மாத்தறை நோக்கி 70 வழித்தடங்களில் பேருந்து சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாகும்புர, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை மற்றும் கடுவலை ஆகிய இடங்களிலிருந்து இந்த சேவைகள் கண்காணிக்கப்படுகின்றன.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டிருந்த சில தொடருந்து பாதைகள் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி கொழும்பு கோட்டை முதல் கன்கேசன்துறை வரை தொடருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.
அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் மருதானை முதல் மாத்தறை வரை இன்று மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற துரித இலக்கத்தை அழைக்க முடியும்.
மேலும் விடுமுறை நிறைவடைந்து டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு திரும்புபவர்களுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





